ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ: மே.இ. தீவுகள் டி20 அணியில் இடம்பெறுவாரா?

இதையடுத்து மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்து அடுத்த வருட டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ: மே.இ. தீவுகள் டி20 அணியில் இடம்பெறுவாரா?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகக் கடைசியாக 2016-ல் விளையாடினார் டுவைன் பிராவோ. அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளதாவது:

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். இளம் வீரர்களும் பொலார்ட், சிம்மன்ஸ், ஹோல்டர் போன்ற மூத்த வீரர்களும் அணியில் உள்ளார்கள். எனவே இந்த மாற்றங்களில் நானும் என்னுடைய பங்களிப்பை அளிக்கவுள்ளேன். மேற்கிந்தியத் தீவுகள் அணியை மீண்டும் கட்டமைத்து, தரவரிசையில் முன்னேற முடியும். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்து அடுத்த வருட டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com