ஒருநாள் தொடர்: இந்தியா-மே.இ.தீவுகள் தீவிரம்

டி20 தொடரை 2-1 என அபாரமாக கைப்பற்றிய நிலையில், அடுத்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் உள்ள இந்தியா.
ஒருநாள் தொடர்: இந்தியா-மே.இ.தீவுகள் தீவிரம்

டி20 தொடரை 2-1 என அபாரமாக கைப்பற்றிய நிலையில், அடுத்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் உள்ள இந்தியா. அதே வேளை மே.இ.தீவுகளும் இத்தொடரை கைப்பற்றி தனது பெயரை காப்பாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் உள்ளது.
 கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவின் முதல் மூன்றுநிலை பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அணியின் பீல்டிங், பவுலிங்கில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து 10-ஆவது ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தவற விடக்கூடாது என கவனமாக உள்ளது இந்திய அணி. தவனுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரராக அவர் களமிறங்கும் பட்சத்தில் தனது திறனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
 ஷிரேயஸ் ஐயர்: மேலும் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஷிரேயஸ் ஐயரும், ரன் குவிப்பில் நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 தொடரில் சொதப்பலாக ஆடிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இத்தொடரில் சிறப்பாக ஆடி, அணியில் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும்.
 பந்துவீச்சில் பின்னடைவு: இடுப்பில் காயமடைந்த புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள சர்துல் தாகுர் மற்ற வீரர்களான ஷமி, தீபக் சாஹர் ஆகியோருடன் இணைந்து சிறப்பாக வீச வேண்டும். சுழற்பந்து வீச்சில் குல்தீப்-சஹல் இணைந்து மிரட்டுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 எழுச்சி பெறுமா மே.இ.தீவுகள்?: அதே நேரத்தில் டி20 தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெற்றி பெற்ற நிலையில் மே.இ.தீவுகள் அணி, கடைசி ஆட்டத்தில் அனைத்து அம்சங்களிலும் சொதப்பி விட்டனர். இந்நிலையில் பொல்லார்ட் தலைமையிலான அணி மீண்டும் எழுச்சி பெற்று ஒருநாள் ஆட்டங்களில் ஆடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 அந்த அணியில் புதிதாக ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப் சேர்ந்துள்ளனர். தற்போதுள்ள ஒருநாள் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். டி20 ஆட்டத்தில் சிறப்பாக ஆடக்கூடிய, மே.இ.தீவுகள் ஒருநாள் தொடரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 டி20 ஆட்டத்தில் அடித்து ஆடும் நிலையில், ஒருநாள் ஆட்டத்தில் அடித்தும், நிலைத்தும் ஆட வேண்டும். விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மே.இ.தீவுகள் அணிக்கு உள்ளது.
 ஷிம்ரன் ஹெட்மயர், நிக்கோலஸ் பூரண் போன்றவர்கள் டி20-இல் அற்புதமாக ஆடிய அதே வேளையில் ஒருநாள் ஆட்டத்திலும் அவர்களது திறமை எடுபடுமா என பார்க்க வேண்டும். பந்துவீச்சில் ஷெல்டன் காட்ரெல், ஜேஸன் ஹோல்டர், ஹெய்டன் வால்ஷ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
 இந்தியாவுக்கு சாதகம்: சென்னை சேப்பாக்கம் மைதான பிட்ச், மெதுவாக இயங்கக் கூடிய தன்மை கொண்டது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடியதாகும். எனினும் ஒரு தொடரில் இந்தியாவுக்கு சாதகமான நிலையே உள்ளது. மழை பெய்துவருவதால் ஆட்டத்துக்கு சிறிது பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
 நேருக்கு நேர்: கடந்த 1979-இல் இருந்து இரு அணிகளும் 130 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் இந்தியா 62-இலும், மே.இ,தீவுகள் 62-இலும் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. 3 ஆட்டங்கள் மழையால் ரத்தாகின.
 ஆடத்தொடங்கி விட்டால் அதிரடி வீரராக ஆவார் ரிஷப் பந்த்
 இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ரன்களை எடுத்து ஆடத்தொடங்கி விட்டால் அதிரடி வீரராக மாறுவார் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.
 தொடர்ந்து சொதப்பலாக ஆடி வரும் நிலையில், பந்த்துக்கு அதிக வாய்ப்பு தரப்படுகிறது குறித்து கேட்டபோது, அவர் கூறுகையில், அவரிடம் உள்ள தனித்திறமை தான் இதற்கு காரணம். அவர் மீண்டும் சிறப்பான பார்முக்கு வருவார் என அனைவரும் நம்புகிறோம். அதற்கு ஏற்ப சிறப்பாக பயிற்சி மற்றும் உடல்தகுதிக்காக உழைத்து வருகிறார்.
 டி20 ஆட்டத்தில் ஒரளவு ஆடினார். லோகேஷ் ராகுல் அற்புதமாக ஆடியுள்ளார். விக்கெட் கீப்பராக ராகுலை பயன்படுத்துவது அணி நிர்வாகத்தின் முடிவு. மயங்க் அகர்வால் ஏ பிரிவு ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடியுள்ளார்.
 தொடக்க வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடுவதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என புகார் குறித்து அவர் கூறுகையில், இது மிகவும் சிக்கலானது. சேஸிங்ஸில் சிறப்பாக ஆடும் நிலையில், அதே வேளை முதலில் பேட்டிங் செய்யும் அம்சத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 காயம்: புவனேஷ்வருக்கு பதிலாக சர்துல் தாகுர்
 மே.இ,தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சர்துல் தாகுர் சேர்க்கப்பட்டுள்ளார்.
 இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் தொடர் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு அண்மையில் தான் டி20 அணியில் சேர்க்கப்பட்டார்.
 ஆனால் கடைசி டி20 ஆட்டத்தில் இடுப்பில் காயமடைந்தார் அவர். இதனால் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் சர்துல் தாகுர் சேர்க்கப்பட்டுள்ளார்.
 வலது இடுப்பில் காயமடைந்த புவனேஷ்வருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சர்துல் தாகுர் அண்மையில் இந்திய ஒருநாள் அணியில் ஆடவில்லை. சையது முஷ்டாக் டி20 ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தாகுரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
 ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடும் இலக்கோடு உள்ளோம்
 ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளோம் என மே.இ.தீவுகள் அணி கேப்டன் பொல்லார்ட் கூறியுள்ளார்.
 சென்னையில் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 டி20 ஆட்டத்தில் எதிர்பார்த்த முடிவுகள் பெறவில்லை. எனினும் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு, தெளிவான உத்தியை வகுத்துள்ளோம்.
 கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என ஒருநாள் தொடரை வென்றோம். எடுத்தவுடன் ஆட்டங்களில் வெற்றி கிடைத்து விடாது. ஆப்கன் தொடரில் சிறப்பாக ஆடினோம்.
 அதைவிட பலம் வாய்ந்த இந்தியாவை தற்போது எதிர்கொள்கிறோம். ஓரே இரவில் வெற்றி கிடைத்து விடாது. எப்போதும் வெற்றி நமது வசம் இருக்காது. சில நேரம் சிறப்பாக ஆடினாலும், வெற்றி கைநழுவி விடும்.
 மிடில் ஆர்டர் பேட்டிங் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்துள்ளோம். பேட்டிங், பவுலிங் இரண்டையும் எவ்வாறு கையாள வேண்டும் என பேசியுள்ளோம். வீரர்களுக்கு தங்கள் பொறுப்பு, கடமை குறித்து தெரியும். ராஸ்டான் சேஸ் மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்ப்பார்.
 கரீபியன் கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடினமாக உழைத்து வரும் வீரர்களை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். இளம் வீரர்கள் பயிற்சி முறையை மாற்றி, பாடுபட்டால் தான் உயரங்களை தொட முடியும்.
 பிராவோ டி20 ஆட்டத்தில் ஓய்வு முடிவை கைவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பொல்லார்ட்.
 இன்றைய ஆட்டம்
 இந்தியா-மே.இ.தீவுகள்
 இடம்; சென்னை
 நேரம்: பிற்பகல் 1.30.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com