விசாகப்பட்டினத்தில் சிக்ஸர் மழை: ரோஹித், ராகுல் சதம்! 387 ரன்கள் குவித்தது இந்திய அணி!

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.
விசாகப்பட்டினத்தில் சிக்ஸர் மழை: ரோஹித், ராகுல் சதம்! 387 ரன்கள் குவித்தது இந்திய அணி!

விசாகப்பட்டினத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தான். ரோஹித் சர்மா, ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பலரும் சிக்ஸர் மழை பொழிந்து விட்டார்கள்.

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் லூயிஸ், கேரி பியரி ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளார்கள். இந்திய அணியில் ஷிவம் டுபேவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இந்தியத் தொடக்க வீரர்கள் விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ராகுல். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. பந்துகளை வீணடிக்காமல் ஆடிய ராகுல், 46 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் கவனமாக விளையாடி ரன்கள் சேர்த்தார் ரோஹித் சர்மா. நடுவில் 12 பந்துகளுக்கு ஒரு ரன்னும் எடுக்காமல் விளையாடினார். 67 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித். 26-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா 73 ரன்களில் இருந்தபோது அவர் வழங்கிய கேட்சை நழுவவிட்டார் ஹெட்மையர். இதற்குப் பிறகு பவுண்டரிகளும் சிக்ஸரும் அடித்து ராகுலின் ஸ்கோரைத் தாண்டி ஆச்சர்யப்படுத்தினார் ரோஹித் சர்மா. அப்படியே அவரை முந்திச் சென்று 106 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 28-வது ஒருநாள் சதம். இந்த வருடம் ரோஹித் எடுக்கும் 7-வது சதம். இந்திய வீரர்களில் ஒரு வருடத்தில் அதிக சதங்கள் (9) எடுத்தவர், சச்சின், 1998-ம் வருடத்தில். 

இதன்பிறகு, 102 பந்துகளில் சதமடித்த ராகுல், அதே ஓவரில் 102 ரன்களில் அல்ஸாரி ஜோஸப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இந்திய கேப்டன் விராட் கோலி யாரும் எதிர்பாராதவிதத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பொலார்ட் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி, 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.

41-வது ஓவரில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. இதனால் ரசிகர்கள் மற்றுமொரு இரட்டைச் சதத்தை ரோஹித் சர்மாவிடமிருந்து எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 159 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் அடிக்கும் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயரும் ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடி மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். 

45-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ரிஷப் பந்த். அதன்பிறகு, காட்ரெட்ல் வீசிய 46-வது ஓவரில் அதகளம் செய்தார். இரு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் என 24 ரன்கள் குவித்தார் பந்த். இந்த ஓவரே பரவாயில்லை என்று எண்ணும் அளவுக்கு அடுத்த ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர், 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். அந்த ஓவரில் 31 ரன்களைக் கொடுத்தார் சேஸ். இது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் இந்திய அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் ஆகும். ரிஷப் பந்தும் ஷ்ரேயஸ் ஐயரும் 24 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்கள். ரிஷப் பந்த் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். கடைசி ஓவரில் ஜாதவ் மூன்று பவுண்டரிகள் அடித்தார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. ஜாதவ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com