ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்த கொல்கத்தா அணி!

தமிழக வீரரான வருண் சக்கரவத்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது கொல்கத்தா அணி.
ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்த கொல்கத்தா அணி!

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் இடம்பெற்றார். அவருடைய அடிப்படை விலை - ரூ. 2 கோடி. அதே தொகைக்கு மும்பை அணி அவரை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த இயன் மார்க்னைத் தேர்வு செய்ய கொல்கத்தாவும் தில்லியும் போட்டியிட்டன. கடைசியில் ரூ. 5.25 கோடிக்கு மார்கனைத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. 

ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. டெஸ்ட் வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா ஆகிய இருவரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இங்கிலாந்து தொடக்க வீரர் கிறிஸ் லின்னை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்சைத் தேர்வு செய்ய ஆர்சிபி, கேகேஆர் அணிகள் போட்டியிட்டன. கடைசியில் ஆர்சிபி அணி ரூ. 4.40 கோடிக்குத் தேர்வு செய்தது. 

மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்ய பஞ்சாப், தில்லி அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில், ரூ. 10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. கடந்த வருடம் மேக்ஸ்வெல்லை தில்லி அணி, ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது.

கிறிஸ் வோக்ஸை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 

யூசுப் பதானை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல காலின் டி கிராண்ட்ஹோமையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தேர்வு செய்ய தில்லி, ஆர்சிபி அணிகள் போட்டியிட்டன. கடைசியில், நம்பமுடியாத அளவுக்கு ரூ. 15.50 கோடிக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் கம்மின்ஸ். 2017-ல் புணே அணி, பென் ஸ்டோக்ஸை ரூ. 14.50 கோடிக்குத் தேர்வு செய்தது. அந்தச் சாதனையை கம்மின்ஸ் முறியடித்துள்ளார். 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏலத்தில் தில்லி அணியுடன் கடுமையாகப் போட்டியிட்டு, ரூ. 5.50 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி.

கிறிஸ் மாரிஸை ஆர்சிபி அணி ரூ. 10 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது. ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

அலெக்ஸ் கேரியை ரூ. 2.20 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி. இவரை ஆர்சிபி அணி தேர்வு செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தில்லி அணி தட்டிச் சென்றுள்ளது. 

குசால் பெரேரா, ஆண்ட்ரூ டை, நமன் ஓஜா, கிளாசென், ஷாய் ஹோப், மோத் சர்மா, டேல் ஸ்டெயின், முஷ்ஃபிகுர் ரஹிம், டிம் செளதி ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இந்திய வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட்டை சிஎஸ்கே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. 

மே.இ. தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல்லை பஞ்சாப் அணி, ரூ. 8.50 கோடிக்குத் தேர்வு செய்தது. 

சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

ராகுல் திரிபாதியை கொல்கத்தா ரூ. 60 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்திய வீரர்கள் விராட் சிங், ப்ரியம் கர்க் ஆகியோரை தலா ரூ. 1.90 கோடிக்குத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. தீபக் ஹூடாவை பஞ்சாப் அணி ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. 

தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது கொல்கத்தா அணி. யு-19 வீரர் ஜெயிஸ்வாலை ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com