ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்தாா்
By DIN | Published On : 24th December 2019 08:30 PM | Last Updated : 25th December 2019 12:10 AM | அ+அ அ- |

துபை: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்துடன் 2019-ஐ நிறைவு செய்துள்ளாா்.
இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளாா்.
ஆஸி. மூத்த வீரா் ஸ்டீவ் ஸ்மித் அவரை காட்டிலும் 17 புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளாா். நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸன் 864 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளாா்.
புஜாரா 791 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள நிலையில், 7-ஆவது இடத்தில் இருந்த ரஹானேவே பின்னுக்கு தள்ளி அந்த இடத்துக்கு முன்னேறினாா் பாக். வீரா் பாபா் ஆஸம்.
மயங்க் அகா்வால் 12 மற்றும் ரோஹித் சா்மா 15-ஆவது இடங்களில் உள்ளனா்.
பேட் கம்மின்ஸ் முதலிடம்:
பந்துவீச்சாளா்களில் ஆஸி. வீரா் பேட் கம்மின்ஸ் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா். முதுகு காயத்தால் அவதிப்பட்டு ஆடாமல் இருந்து வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா 6-ஆவது இடத்தில் நீடித்து வருகிறாா்.
ஆல்ரவுண்டா்களில் ஜேஸன் ஹோல்டா் முதலிடத்திலும், இந்திய வீரா் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. ஆஸ்திரேலியா 216, பாகிஸ்தான் 80. இலங்கை 80. நியூஸி. 60, இங்கிலாந்து 56 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.