ரஞ்சியில் விளையாட வேண்டாம்: பும்ராவுக்கு கங்குலி கட்டளை!
By எழில் | Published On : 25th December 2019 01:10 PM | Last Updated : 25th December 2019 01:11 PM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துபோது கடைசியாக விளையாடினார் பும்ரா. அதன்பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, விசாகப்பட்டினத்தில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தனது உடற்தகுதியை நிரூபிக்க குஜராத் அணி சார்பாக கேரள அணிக்கு எதிராக விளையாட இருந்தார் பும்ரா.
இந்நிலையில் ரஞ்சி ஆட்டத்தில் விளையாட வேண்டாம் என பும்ராவுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி கட்டளையிட்டுள்ளார். இதனால் இன்றைய ரஞ்சி ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை.