Enable Javscript for better performance
4-ஆவது ஒரு நாள் ஆட்டம்: நியூஸி.யின் ஸ்விங்கால் சுருண்டது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    4-ஆவது ஒரு நாள் ஆட்டம்: நியூஸி.யின் ஸ்விங்கால் சுருண்டது இந்தியா

    By DIN  |   Published on : 01st February 2019 01:45 AM  |   அ+அ அ-   |    |  

    spt2

    நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் 92 ரன்களில் இந்தியாவை சுருட்டி, நியூஸிலாந்தி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

    நியூஸிலாந்தில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று ஆடி வரும் இந்திய அணி ஏற்கென5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி இருந்தது. 

    இந்நிலையில் நான்காவது ஒரு நாள் ஆட்டம் ஹாமில்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி. பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பமே சரிவு: நியூஸி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. ரோஹித் சர்மா 7, ஷிகர் தவன் 13, ஷுப்மன் கில் 9 ஆகிய முதல் 3 முக்கிய விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் பெளல்ட் சாய்த்தார்.
    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அம்பதி ராயடு. தினேஷ் கார்த்திக், ஆகியோர் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் டக் அவுட்டானார்கள்.

    கேதர் ஜாதவ் 1, ஹார்திக் பாண்டியா 16 உள்ளிட்டோர் பெளல்ட் பந்துவீச்சிலும், புவனேஸ்வர்குமார் 1, கலீல் அகமது 5 ரன்களுக்கும் அவுட்டானார்கள். கடைசி வரிசையில் குல்தீப் யாதவ் 15, யுஜவேந்திர சஹல் 18 ஆகியோர் போராடி ரன்களை சேர்க்க முயன்றனர். எனினும் குல்தீப் யாதவை டாட் ஆஸ்ட்லே அவுட்டாக்கினார்.

    8 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களுடன் இந்தியா தடுமாறிய நிலையில் 9-ஆவது விக்கெட்டுக்கு சஹல், குல்தீப் இணை 25 ரன்களை சேர்த்தனர்.  இறுதியில் 30.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்களில் சுருண்டது இந்தியா. 

    பெளல்ட்-கிராண்ட்ஹோம் அபாரம்: நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் பெளல்ட் 5-21, காலின் டி கிராண்ட்ஹோம் 3-26, விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் சரிவுக்கு காரணமாக அமைந்தனர். டாட் ஆஸ்ட்லே, ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸி.: 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸி அணியின் மார்ட்டின் கப்டில் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 30 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 37 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

    இறுதியில் 14.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் டை மட்டுமே இழந்து 93 ரன்களுடன் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து. இந்திய தரப்பில் புவனேஸ்வர்குமார் 2-25 விக்கெட்டை வீழ்த்தினார். டிரென்ட் பெளல்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    கோலி, தோனி இல்லாமையால் சிக்கல்: கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு, மூத்த வீரர் தோனி காயமுற்றதால் ஆடமுடியாமல் போனது போன்றவை இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. 33 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு அனுபவ வீரர்கள் கோலி, தோனி இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியது. பாண்டியா-கேதர் ஜாதவால் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை. 

    ஸ்விங்கால் சுருண்ட இந்தியா: நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார ஸ்விங் பந்துவீச்சால் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிட்சில் நிலவிய பந்து ஸ்விங் ஆகும் தன்மையை பெளல்ட், கிராண்ட்ஹோம் சரியாக பயன்படுத்தினர்.

    7-ஆவது குறைந்த ஸ்கோர்: ஒரு நாள் ஆட்டங்களில் 92 ரன்கள், இந்தியாவின் ஏழாவது மிகவும் குறைந்த ஸ்கோராக அமைந்தது. ஏற்கெனவே இதே ஹாமில்டன் மைதானத்தில் இந்தியா 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. கடந்த 2000-இல் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக 54 ரன்களில் சுருண்டதே இந்தியாவின் மிகவும் குறைந்த ஸ்கோராகும்.

    ரோஹித் சர்மாவின் 200-ஆவது ஆட்டம்:  விராட் கோலிக்கு பதிலாக அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு இது 200-ஆவது ஒரு நாள் ஆட்டமாகும். இதில் இந்தியா படுதோல்வியை தழுவியது.

    ஸ்விங் பந்துவீச்சால் வெற்றி

    பிட்ச் திடீரென இதுபோன்று மாறும் என எதிர்பார்க்கவில்லை. 90 ரன்களோடு இந்தியாவை கட்டுப்படுத்தியது சிறப்பானது. துரிதமாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என எதிர்பார்த்தோம். அதே போல் சீரான வகையில் பந்துவீச்சாளர்கள் தங்கள் கடமையை செய்தனர். 
    எளிதான இலக்கையும் சிறப்பாக சேஸ் செய்தோம். கிரிக்கெட் ஆட்டம் மிகவும் வித்தியாசமானது. கடைசி ஆட்டம் நடக்கவுள்ள வெலிங்டன் மைதானமும் வேறுவகையானது. உலகின் சிறந்த அணியை வென்றது மகிழ்ச்சி தருகிறது.

    மிக மோசமான ஆட்டம்

    நீண்ட காலத்துக்கு பிறகு நாம் பேட்டிங்கில் மிகவும் மோசமான ஆட்டத்தை ஆடினோம். இந்த வெற்றி நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு உரியது. ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வதில் நாம் மேலும் பாடம் கற்க வேண்டும். 
    எங்களை நாங்களே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். சில மோசமான ஷாட்களை ஆடியதால் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். எங்கே தவறு நடந்தது என்பதை அறிவோம். நாட்டுக்காக ஆடும் போது சிறப்பாக ஆட முயற்சிக்க வேண்டும் என்றார்.

    பெளல்ட் புதிய சாதனைகள்

    நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பெளல்ட் இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்த ஆட்டத்தில் தொடர்ந்து 10 ஓவர்கள் வீசிய பெளல்ட் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5-ஆவது முறையாக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    10 ஓவர்களில் பெளல்ட் 4 மெய்டன் ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் ஓரே நாட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும படைத்தார். (49 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள்)

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp