மீண்டும் அசத்திய மே.இ. பந்துவீச்சாளர்கள்: 187 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என இங்கிலாந்து வீரர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்...
மீண்டும் அசத்திய மே.இ. பந்துவீச்சாளர்கள்: 187 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என இங்கிலாந்து வீரர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் தடுமாறியுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்டையும் வென்று மே.இ. அணி தொடரை வெல்லுமா என்கிற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆண்டிகுவா - நார்த் செளண்டில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது சரியான முடிவு என்பதுபோல பந்துவீச்சாளர்கள் மீண்டும் அசத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார்கள். பர்ன்ஸ், டென்லி, ரூட், பட்லர் ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்கள். பேர்ஸ்டோவ் 64 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 52 ரன்களை விரைவாக எடுத்து பதிலடி கொடுத்தாலும் அவர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. 93 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது மொயீன் அலி - ஃபோக்ஸ் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடி ஸ்கோர் 150 ரன்களைத் தாண்ட உதவியது.

எனினும் மொயீன் அலி 60 ரன்களிலும் ஃபோக்ஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த சாம் கரண், 6 ரன்களில் வெளியேறினார். கடைசியில் முதல் இன்னிங்ஸில் 61 ஓவர்களில் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. மே.இ. தரப்பில் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் ஜோஸப் 2 விக்கெட்டுகளும் ஹோல்டர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல்நாள் முடிவில் 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் மட்டும் சேர்த்தது. முதல் நாளிலேயே மே.இ. அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளதால் இந்த டெஸ்டையும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com