டேபிள் டென்னிஸின்  இளம் புயல் மனிகா பத்ரா!

பாட்மிண்டனை வாழ்க்கையாக தேர்வு செய்ய இளம் பெண்களுக்கு சாய்னா நெவாலும், பி.வி.சிந்துவும் எப்படி மிகப் பெரிய உந்து சக்தியாக மாறி, அந்த
டேபிள் டென்னிஸின்  இளம் புயல் மனிகா பத்ரா!



பாட்மிண்டனை வாழ்க்கையாக தேர்வு செய்ய இளம் பெண்களுக்கு சாய்னா நெவாலும், பி.வி.சிந்துவும் எப்படி மிகப் பெரிய உந்து சக்தியாக மாறி, அந்த விளையாட்டுக்கு இந்தியாவில் மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்களோ அதுபோன்று டேபிள் டென்னிஸை இளம்பெண்கள் தேர்ந்தெடுத்து விளையாட முன்னுதாரணமாகத் திகழ்பவர் இந்திய இளம் வீராங்கனை மனிகா பத்ரா. ஏன் டேபிள் டென்னிஸ் என்றாலே அந்த விளையாட்டின் ரசிகர்களுக்கு இவரின் பெயரும், வசீகரமான முகமும் நினைவுக்கு வந்துவிடும்.
இளம் வயதில் தொடங்கிய பயணம்: 23 வயது மனிகா பத்ரா தில்லியில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 4 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். அவரது சகோதரி அன்சால், சகோதரர் சாஹில் ஆகியோர் டேபிள் டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்துதான் அந்த விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டார் மனிகா.
மாநில அளவில் நடைபெற்ற 8 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்ற மனிகா, பயிற்சியாளர் சந்தீப் குப்தாவின் பயிற்சிப் பள்ளியில் இணைந்தார். ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து கொண்டு மறுபக்கம் டேபிள் டென்னிஸில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
டேபிள் டென்னிஸ் மீது காதல்: 1991ஆம் ஆண்டில் டேபிள் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக சாம்பியனும், மூத்த வீரருமான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கார்ஸ்சனின் பயிற்சி மையத்தில் சேர மனிகா பத்ராவுக்கு 16 வயதில் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் அந்த வாய்ப்பை தவிர்த்தார். தேடிவந்த மாடலிங் வாய்ப்பையும் டேபிள் டென்னிஸுக்காக தேர்வு செய்யாமல் இருந்தார். டேபிள் டென்னிஸுக்காக இளங்கலை பட்டப்படிப்பையும் முடிக்காமல் முதலாம் ஆண்டுடன் கல்லூரிப் படிப்பை விட்டு விலகினார்.
வாழ்க்கையை டேபிள் டென்னிஸுக்கு அர்ப்பணிக்க அவர் முன்வந்ததற்குக் காரணம், அந்த விளையாட்டின் மீது அதீத காதல் கொண்டிருந்ததுதான் என்பதை சொல்லத் தேவையில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி, 2015இல் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 2016இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்தியா சார்பில் பங்கேற்றார் இளம் புயல் மனிகா.
கடந்த ஆண்டு நடைபெற்ற கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மனிகா பத்ரா.
பதக்க வேட்டை: காமன்வெல்த் போட்டியில் மகளிர் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரும் இவரே.
(ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு காமன்வெல்த்தில் தங்கம் வென்று தந்த முதல் டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல்)
குழு பிரிவிலும் இந்திய அணிக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தந்தார் மனிகா. அந்தப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
21 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சிலே ஓபனில் கடந்த 2011ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2017ஆம் ஆண்டு சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியின்ஷிப் போட்டியில் மற்றொரு இந்திய மூத்த வீராங்கனையான மௌமா தாஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் காலிறுதி வரை முன்னேறினார் மனிகா.
61 ஆண்டுகளில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் மனிகா இணை நிகழ்த்திய மற்றொரு சாதனை இது.
மகளிர் குழு பிரிவு, ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்து பெருமை சேர்த்திருக்கிறார் மனிகா.
2016ஆம் ஆண்டில் ஒரு பேட்டி ஒன்றில், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 160ஆவது இடத்தில் இருக்கும் நான் விரைவில் 50 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறேன்' என்று கூறியிருந்தார் மனிகா.
தற்போது அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு பிப்ரவரி மாதத்துக்கான தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதில், 47 ஆவது இடத்துக்கு முன்னேறி, 2 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் மனிகா.
மகளிர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் எந்தவொரு வீராங்கனையும் இதற்கு முன்பு 50 இடங்களுக்குள் இடம்பெற்றதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
2008ஆம் ஆண்டு முதல் தாய்நாட்டுக்காக டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் மனிகா பத்ராவுக்கு கடந்த ஆண்டு (2008) அர்ஜுனா விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
வெற்றி பெறுவதற்கு இவர் கூறிய  சில வார்த்தைகள், பயிற்சியுடன் திறமையும் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம்'.
இந்தியாவில் மகளிர் டேபிள் டென்னிஸின் அடையாளமாக மாறிவரும் மனிகா பத்ரா தாய்நாட்டுக்கான பதக்க வேட்டையைத் தொடரட்டும்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com