சுடச்சுட

  

  கடைசி டி20: 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து த்ரில் வெற்றி: தொடரையும் 2-1 என கைப்பற்றியது

  By    ஹாமில்டன்  |   Published on : 11th February 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NEWZEALAND_WIN

  இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து, தொடரையும் 2-1 என கைப்பற்றியது.
   நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கஎனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
   இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் நியூஸி. 80 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன.
   தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூஸி. தரப்பில் டிம் சைஃபெர்ட், காலின்மன்றோ களமிறங்கினர்.
   இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தனர்.
   காலின் மன்றோ அதிரடி ஆட்டம்
   சைபெஃர்ட் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 25 பந்துகளில் 43 ரன்களை விளாசி குல்தீப் யாதவ் பந்தில் தோனியால் அவுட் செய்யப்பட்டார். அவருக்கு பின் காலின் மன்றோ தலா 5 சிக்ஸர், பவுண்டரியுடன் 40 பந்துகளில் 72 ரன்களை குவித்து குல்தீப் பந்தில் வெளியேறினார்.
   பின்னர் வந்த கேன் வில்லியம்ஸன் 3 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும், கிராண்ட்ஹோம் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 30 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்திருந்தது நியூஸிலாந்து.
   மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேரில் மிச்செல் 19, ராஸ் டெய்லர் 14 ரன்களுடனும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
   20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது.
   கடைசி 5 ஓவர்களில் டேரில் மிச்செல், ராஸ் டெய்லர் இணை 61 ரன்களை குவித்து ஸ்கோரை உயர்த்த உதவியது.
   குல்தீப் யாதவ் 2-26, புவனேஸ்வர் குமார் 1-37, கலீல் அகமது 1-47 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
   இந்தியா போராடித் தோல்வி
   213 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் இணை களமிறங்கியது.
   ஷிகர் தவன் 5 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ரோஹித்-விஜய் சங்கர் இணை ரன்களை உயர்த்தியது.
   விஜய் சங்கர் அபாரம்
   2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 43 ரன்களை விளாசிய விஜய் சங்கர், சான்ட்னர் பந்துவீச்சில் வெளியேறினார்.
   இளம் வீரர் ரிஷப் பந்த்தும், 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 12 பந்துகளில் 28 ரன்களை எடுத்து வெளியேறினார். அவருக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா 3 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்த நிலையில் டேரில் மிச்செல் பந்துவீச்சில் அவுட்டானார்.
   ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 21 ரன்களுக்கும், தோனி 2 ரன்களுக்கும் அவுட்டாயினர்.
   தினேஷ்கார்த்திக்-க்ருணால் பாண்டியா முயற்சி வீண்
   பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஆகியோர் சேர்ந்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.
   கடைசி மூன்று ஓவர்களில் 47 ரன்கள் தேவை என்ற நிலையில், 18, 19-ஆவது ஓவர்களில் 32 ரன்களை சேர்த்தனர். எனினும் 20-ஆவது ஓவரில் டிம்செüதி அற்புதமாக பந்துவீசி வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுத் தந்தார். கடைசி 28 பந்துகளில் 63 ரன்களை குவித்தது தினேஷ்-க்ருணால் பாண்டியா இணை.
   4 சிக்ஸர்களுடன், 16 பந்துகளில் 36 ரன்களுடன் தினேஷ் கார்த்திக்கும், தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன், 30 பந்துகளில் 26 ரன்களுடன் க்ருணால் பாண்டியாவும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
   20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்களை மட்டுமே இந்தியாவால் பெற முடிந்தது. நியூஸி தரப்பில் மிச்செல் சான்ட்னர் 2-32, டேரில் மிச்செல் 2-27, ஸ்காட், பிளேயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
   இறுதியில் 2-1 என்ற தொடரையும் கைப்பற்றியது நியூஸிலாந்து.
   அதன் வீரர்கள் காலின் மன்றோ ஆட்ட நாயகனாகவும், டிம் சைபெஃர்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
   ஒரு நாள் தொடரை படுமோசமாக இழந்த நியூஸிலாந்து அணிக்கு டி20 தொடர் வெற்றி ஆறுதலாக அமைந்தது.
   பிரதான வீரர்களுக்கு ஓய்வு
   இந்திய அணியில் கேப்டன் கோலி, முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு கடைசி ஆட்டத்தில் ஓய்வு தரப்பட்டிருந்தது. தனது பதிலி வீரர்களையே இந்தியா களமிறக்கி சோதித்து பார்த்தது. கடந்த 80 நாள்களாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணியினருக்கு டி20 தொடர் தோல்வி சிறிது வேதனையை ஏற்படுத்தியது.
   மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டது மிகுந்த வியப்பை தந்தது
   இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாம் நிலையில் களமிறக்கப்பட்டது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது என ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
   நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த கடைசி டி20 ஆட்டத்தில் கேப்டன் கோலியின் மூன்றாம் நிலையில் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். 28 பந்துகளில் 43 ரன்களை விளாசி, முதல் அரைசதத்தை தவறவிட்டார். அவர் கூறுகையில்: மூன்றாம் நிலையில் என்னை ஆடுமாறு கூறியது மிகுந்த வியப்பை தந்தது. இது பெரிய விஷயமாகும். சூழ்நிலையை உணர்ந்து ஆடினேன். இந்தியாவுக்காக ஆடும் போது, எந்த நிலையிலும் ஆடத் தயாராக இருக்க வேண்டும்.
   ஆஸி., நியூஸி தொடர்கள் மிகுந்த அனுபவத்தை அளித்தன. நான் பந்துவீசவில்லை என்றாலும், கடினமான சூழலில் பந்துவீச கற்றேன். மூத்த வீரர்கள் கோலி, தோனி, ரோஹித் பேட்டிங்கை பார்த்தை பல அம்சங்களை அறிந்தேன். கடந்த டிசம்பரில் இந்திய ஏ அணியில் நியூஸிலாந்து வந்தது போதிய அனுபவத்தை அளித்தது. கடைசி டி20 ஆட்டமும் கற்கும் வகையில் அமைந்தது. ஆட்டங்களில் அணி வெற்றி பெற உதவினால் அது எனக்கும் உதவியாக இருக்கும் என்றார்.
   டி20 தொடர் முடிவால் அதிருப்தி
   டி20 தொடர் முடிவால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
   1-2 என தொடரை இழந்தாலும், இதில் நல்ல பல அம்சங்களுடன் நாடு திரும்புகிறோம். ஹாமில்டன் ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை நாங்கள் போராடினோம். 213 என்ற இலக்கு கடினமானது. ஆனால் நியூஸி. பந்துவீச்சாளர்கள், யார்க்கர்களை வீசி ஆட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒரு நாள் தொடரை சிறப்பாக தொடங்கினோம். நமது வீரர்கள் தொடர்ந்து கடும் உழைப்பை தந்தனர். இந்த முடிவால் அதிருப்தி அடைந்தாலும், செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் என்றார் ரோஹித்.
   டி20 தொடர் வெற்றியால் அதிக நம்பிக்கை
   இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியதின் மூலம் எங்களுக்கு அணிக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிக ஸ்கோர் கொண்ட சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. டி20 கிரிக்கெட்டுக்கு இந்த ஆட்டம் சிறந்த விளம்பரமாக திகழ்ந்தது.
   இரு அணிகளும் சமமான அளவில் திறமையாக ஆடின. நாங்கள் சிறிது கூடுதலாக ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றார் வில்லியம்ஸன்.
   தேசிய கொடிக்கு தோனி மரியாதை
   நியூஸிலாந்து அணி பேட்டிங்கின் போது, மூத்த வீரர் தோனி கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் தேசியக் கொடியுடன் திடீரென நுழைந்த இந்திய ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். அங்கு, தேசிய கொடி கீழே மைதானத்தில் கீழே விழுமாறு இருந்த நிலையில், உடனே தோனி, தேசியக் கொடியை தனது கைகளில் வாங்கிக் கொண்டு, ரசிகரை அனுப்பி வைத்தார்.
   தேசிய கொடிக்கு தோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூகவலைதங்களில் வைரலாகி உள்ளது.
   300ஆவது டி20 ஆட்டத்தில் தோனி
   ஹாமில்டனில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் பங்கேற்றதின் மூலம் 300 டி20 ஆட்டங்களில் ஆடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். இதற்கு முன்பு மே.இ.தீவுகளின் கிய்ரன் பொல்லார்ட், கிறிஸ் கெயில், பிரவோ, பாக். வீரர் ஷோயிப் மாலிக், ஆகியோர் 300 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளனர். இதில் கிய்ரன் பொல்லார்ட் 446 ஆட்டங்களில் ஆடி முதலிடத்தில்
  உள்ளார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai