இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சவாலை எதிர்கொண்டுள்ள சிந்து, சாய்னா

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் பலம் வாய்ந்த வீராங்கனைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.
இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சவாலை எதிர்கொண்டுள்ள சிந்து, சாய்னா


ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் பலம் வாய்ந்த வீராங்கனைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.
இதனால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த போட்டி இரு வீராங்கனைகளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றவர் சிந்து.  ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி வந்தார்.
இந்த ஆண்டு, தென்கொரிய வீராங்கனை சங் ஜி ஹியூனை அவர் முதலாவது சுற்றில் எதிர்கொள்கிறார். 11 ஆவது இடத்தில் இருக்கும் அவரை ஒற்றையர் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் சிந்து சந்திக்கிறார். இதற்கு முன்பு சங் ஜி ஹியூனிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஹாங் காங் ஓபனில் தோல்வி அடைந்தார் சிந்து. அவரை வீழ்த்தினால், காலிறுதியில் போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடம் வகிக்கும் சீனாவின் சென் யூஃபெய் சந்திப்பார் சிந்து.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், கடந்த 2015ஆம் ஆண்டில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இந்த ஆண்டில், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரை அவர் எதிர்கொள்கிறார்.
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியனான உற்சாகத்தில் உள்ள சாய்னா, முதல் சுற்றில் வெற்றி பெற்றால், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் தைவான் வீராங்கனை தாய் ஸு யிங்கை காலிறுதியில் சந்திப்பார். இதற்கு முன்பு 11 ஆட்டங்களில் சாய்னா நெவால் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
சீனியர் பாட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவரும் சிந்துவும், சாய்னாவும் அடுத்து இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
ஆடவர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,  பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெஸை சந்திக்கிறார். கணுக்கால் காயம் காரணமாக தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீகாந்த் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.
காலிறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீரர் கென்டோ மோமோடாவை ஸ்ரீகாந்த் எதிர்கொள்ளவும் வாய்ப்புள்ளது. மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா, முன்னாள் நம்பர் ஒன் வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்செனை சந்திக்கிறார். சாய் பிரணீத், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோரும் இந்தியாவின் நம்பிக்கையாக உள்ளனர்.
மகளிர் இரட்டையர் பிரிவில், அஸ்வினி பொன்னப்பா, என்.சிக்கி ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த இணை, முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் ஷிஹோ டனாகா, கொஹாரு யோன்மோடோ இணையை எதிர்கொள்கிறது.
இந்தியாவின் மேக்னா ஜக்கம்புடி, பூர்விஷா எஸ் ராம் இணை, ரஷியாவின் எகாடெரீனா போலோடோவா, அலீனா டாவ்லெடோவா ஜோடியை சந்திக்கிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில், தேசிய சாம்பியனான மனு அட்ரி, பி.சுமீத் ரெட்டி ஜோடி, சீன வீரர்களை சந்திக்கிறது.
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா வெற்றி பெறவில்லை. 
இத்தனை ஆண்டுகால எதிர்பார்ப்பை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் பூர்த்தி செய்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மார்ச் 6ஆம் தேதி பிர்பிங்ஹாமில் இந்தப் போட்டி தொடங்குகிறது.
இதற்கு முன்பு, கடந்த 2001இல் கோபிசந்த், 1980ஆம் ஆண்டில் பிரகாஷ் படுகோன் ஆகியோர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியர்கள் ஆவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com