வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி
By DIN | Published On : 14th February 2019 01:10 AM | Last Updated : 14th February 2019 01:10 AM | அ+அ அ- |

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், 3 டெஸ்ட் அடங்கிய தொரில் விளையாடுகிறது வங்கதேசம்.
முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்பியரில் உள்ள மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் எடுத்தது.
233 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 44.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்டில் 116 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
முதலில் விளையாடிய வங்கதேசத்தின் வீரர்கள், சொற்ப ரன்களில் சீறான இடைவெளியில் தொடர்ந்து ஆட்டமிழந்த வண்ணம் இருந்தனர்.
அதிகபட்சமாக முகமது மிதுன் 62 ரன்களும், சௌம்யா சர்கார் 30 ரன்களும் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிச்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மாட் ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இவ்வாறாக வங்கதேசம் 232 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து தனது இன்னிங்சை தொடங்கியது நியூஸிலாந்து. அந்த அணியின் மார்டின் கப்டில் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஹென்ரி நிக்கோலஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
கப்டிலுக்கு ஒரு நாள் போட்டியில் இது 15ஆவது சதம் ஆகும்.
கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஸ் டெய்லர் (45 ரன்கள்) ஆட்டமிழக்காமல் கப்டிலுக்கு பக்க பலமாக நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முகமதுல்லா, ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.