ஆல்ரவுண்டர் இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா தமிழகத்தின் விஜய்சங்கர்?

இந்திய அணியில் தனக்கான ஆல்ரவுண்டர் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் தக்க வைத்துக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆல்ரவுண்டர் இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா தமிழகத்தின் விஜய்சங்கர்?

இந்திய அணியில் தனக்கான ஆல்ரவுண்டர் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் தக்க வைத்துக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும், தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர், பெளலர்கள், முக்கிய அங்கம் வகிக்கின்றனர். பேட்டிங், பெளலிங் இரண்டும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஆல்ரவுண்டர் என அழைக்கப்படுகின்றனர்.
 ஒரு அணியில் மிகவும் முக்கியமான இடம் ஆல்ரவுண்டராகும். இந்திய கிரிக்கெட் அணியில் வினு மன்கட், கபில்தேவ், ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக திகழ்ந்தனர்.
 
 தற்போது அஸ்வின் உடன், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக ஆடுகின்றனர்.
 இந்நிலையில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ஏற்படும் சரிவை ஆல்ரவுண்டர் தனது சிறப்பான ஆட்டம் மூலம் சரிசெய்வது வழக்கம்.
 ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து தொடர்களில் ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், விஜய் சங்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். விஜய் சங்கர் வலதுகை மிதவேக பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
 நியூஸிலாந்தில் ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் சிறப்பாக ஆடி அணி வெற்றி பெற உதவினார். தமிழக அணியில் இடம் பெற்று பல்வேறு வெற்றிகளை குவிக்க உதவியுள்ளார்.
 ஆஸி.க்கு எதிராக அறிமுகம்: இந்திய சீனியர், தமிழகம், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ், இந்தியா ஏ, பி., சி, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளிலும் ஆடியுள்ளார்.
 கடந்த ஜன.18-இல் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார் விஜய் சங்கர். மேலும் கடந்த 2018 மார்ச்சில் இலங்கைக்கு எதிராக டி20 ஆட்டத்திலும் அறிமுகமானார். ஒருநாள் ஆட்டத்தில் அதிகபட்சமாக 45 ரன்களையும், டி20 ஆட்டத்தில் அதிகபட்சமாக 43 ரன்களையும் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 63 ரன்களை விளாசியுள்ளார். பெளலிங்கில் டி20-இல் 2-32 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 அவ்வவ்போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விஜய் சங்கர் தற்போது தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார். தமிழக அணியில் சிறப்பாக ஆடி வரும் அவர், பேட்டிங், பந்துவீச்சில் சிறந்த செயல்பாட்டுக்காக இந்திய அணியில் இடம் பிடித்தார்.
 அவரது குடும்பமும் கிரிக்கெட் குடும்பம் தான். தமிழக அணியில் சுப்பிரமணியம் பத்ரிநாத் விலகலுக்கு பின் மிடில் ஆர்டரில் தனது இடத்தை உறுதி செய்தார் விஜய்சங்கர். முதல் தர கிரிக்கெட்டில் 2012-இல் நுழைந்த அவர், 2014-15 ரஞ்சி சீசனில் இரண்டு அரைசதம், 2 சதங்களை அடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.
 நிதாஷ் கோப்பையில் கரும்புள்ளி: தொடர்ந்து இந்திய ஏ, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளில் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் கோப்பைக்கான டி20 அணியில் சேர்க்கப்பட்டு சிறந்த பெளலிஙுக்காக ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான 18-ஆவது ஓவரில் 4 பந்துகளை வீணடித்தது கரும்புள்ளியாக அமைந்தது.
 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் அணிகளில் ஆடிய அவர், கடந்த சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றார். அதிரடி பேட்டிங்கில் சற்று மெத்தனமாக உள்ளதால், போதிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காத நிலை உள்ளது.
 ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பின் தமிழகத்தில் இருந்து ஆல்ரவுண்டராக இந்திய அணியில் உயர்ந்துள்ளார் விஜய்சங்கர். தொடர்ந்து ஆஸி. தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக தினமணி நிருபரிடம் விஜய் சங்கர் கூறியதாவது:
 ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. அதே நேரத்தில் இந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்காகும்.
 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தவே விரும்புகிறேன் என்றார் விஜய்சங்கர்.
 
 பா.சுஜித்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com