இந்த வீரரை உலகக் கோப்பை அணியில் சேர்த்தே ஆகவேண்டும்: முன்னாள் கேப்டன் கோரிக்கை

வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாவது அவர்களுடைய ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்தும், அணிக்கும் நல்லது ஆகும்... 
இந்த வீரரை உலகக் கோப்பை அணியில் சேர்த்தே ஆகவேண்டும்: முன்னாள் கேப்டன் கோரிக்கை

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடக்கிறது.  இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

முதல் 3 உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெற்றன. அதன்பிறகு 1999-ல் நடைபெற்றது. உலகக் கோப்பை சாம்பியன் போட்டிகளை அதிக முறை நடத்தியும், 1979, 1987, 1992-ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கும் முன்னேறிய இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை பட்டம் எட்டாகக் கனியாகவே உள்ளது. தற்போது ஒருநாள் ஆட்ட தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ள நிலையில் சொந்த மண்ணில் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. மொர்கன், ஜோ ரூட், ஜேஸன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், போன்ற அதிரடி வீரர்களுடன் உள்ளது இங்கிலாந்து. வரும் மே. 30-இல் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே லண்டன், கென்னிங்டன் ஓவலில் தொடக்க ஆட்டம் நடக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் ஒரு பேட்டியில் இங்கிலாந்து அணி குறித்துக் கூறியதாவது:

கடைசி நிமிட மாற்றங்களில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் ஜோஃப்ரா ஆர்சர் என்கிற தனிச்சிறப்பு மிக்க வீரர் ஒருவர் உள்ளார். உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு உங்கள் அணியை இன்னும் முன்னேற்ற விரும்பினால் அவரை அணியில் சேர்க்கலாம். அவரை அணியில் சேர்ப்பதால் பிளங்கட், டேவிட் வில்லே போன்ற வீரர்களுக்குச் சிக்கல்கள் நேரலாம். வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாவது அவர்களுடைய ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்தும், அணிக்கும் நல்லது ஆகும். 

உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணியே முன்னிலையில் உள்ளது. அவர்கள் நிச்சயம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறுவார்கள். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் தோற்றார்கள். அதனால் இந்தமுறை இங்கிலாந்து அணி நாக் அவுட் ஆட்டங்களில் உறைந்துவிடக்கூடாது. மிகச்சிறந்த இரு அணிகள் என இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளைச் சொல்வேன். ஆனால், சாம்பியன் டிராபியில் பார்த்ததுபோல பல அணிகள் இந்தப் போட்டியை வெல்லக்கூடும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com