எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டுக்காக பதக்கம் வென்றேன்! பிரஜ்னேஷ் குணேஷ்வரன் பேட்டி

இந்தியாவில் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான பிரஜ்னேஷ் குணேஷ்வரன் (29) அளித்த பேட்டி:
எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டுக்காக பதக்கம் வென்றேன்! பிரஜ்னேஷ் குணேஷ்வரன் பேட்டி

இந்தியாவில் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான பிரஜ்னேஷ் குணேஷ்வரன் (29) அளித்த பேட்டி:

நாட்டின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர்? எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அளவில் நம்பர் ஒன்னாக இருப்பதற்கு பல ஆண்டுகள் கடினமான உழைப்பைத் தர வேண்டியிருந்தது. தற்போது அந்த நிலையை எட்டியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜகார்த்தாவில் கடந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து?

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டுக்காக பதக்கம் வென்றேன். இந்தப் போட்டித் தொடர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஏடிபி சேலஞ்சர் பட்டங்கள் வென்றது குறித்த நினைவுகள்?

சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியில் வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. அரையிறுதியிலும், இறுதிச் சுற்றிலும் முதல் செட்டை இழந்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த செட்டுகளைக் கைப்பற்றினேன். சீனாவில் சேலஞ்சர் பட்டம் வென்ற பிறகு எனக்குள் அதிக நம்பிக்கை ஏற்பட்டது.அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடினேன். இரண்டாவது ஏடிபி சேலஞ்சர் பட்டம் பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் வென்றேன். அந்தப் போட்டித் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடினேன்.

காயத்திலிருந்து மீண்டு வருவது எப்படி?

டென்னிஸ் மீது எனக்கு இருக்கும் தீராக் காதல் தான் எவ்வளவு காயமடைந்தாலும் தொடர்ந்து மீண்டு வருவதற்கு காரணம். எந்தப் பிரச்னைக்கும் தீர்வு நிச்சயம் உண்டு. காயத்திலிருந்து மீண்டு பழைய ஆட்டத் திறனை மீண்டும் ஒவ்வொரு முறையும் மீட்டெடுக்கிறேன்.

டென்னிஸில் சாதிக்க நினைக்கும் ஜூனியர் வீரர்களுக்கு உங்கள் ஆலோசனை?

கடுமையான உழைப்பைக் கொடுங்கள். தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நாம் வீழ்த்தப்பட்டு விடுவோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

தமிழகத்தில் டென்னிஸ் எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு நமது கலாசாரத்துடன் இணைந்துள்ளது. டென்னிஸை பொறுத்தவரை சிறந்த பல வீரர்களை தமிழகம் அளித்து வருகிறது.

உங்களுடைய இலக்கு?

அடுத்தடுத்த வரவுள்ள போட்டிகளில் பங்கேற்கிறேன். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் டாப் 50 பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக பாடுபட்டு வருகிறேன் என்று கூறிய பிரஜ்னேஷ் சமீபத்தில் ஒற்றையர் தரவரிசையில் 97 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு கடந்த 10 ஆண்டுகளில் சோம்தேவ் தேவ்வர்மனும், யூகி பாம்ரியும் டாப் 100 பட்டியலில் இடம்பிடித்த இந்திய டென்னிஸ் வீரர்கள் ஆவர்.

டாப் 50-க்குள் இடம்பெற்று தொடர் வெற்றிகளைக் குவிக்க பிரஜ்னேஷுக்கு வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com