கெய்லின் சிக்ஸர் மழை வீணானது: மே.இ. அணி அடித்த 360 ரன்களை அசால்டாக அடைந்த இங்கிலாந்து அணி!
By எழில் | Published On : 21st February 2019 12:29 PM | Last Updated : 21st February 2019 12:34 PM | அ+அ அ- |

பிரிட்ஜ்டெளனில் நேற்று நடைபெற்று மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தைக் காண வந்தவர்கள் இப்படியொரு சிக்ஸர் மழையை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எனினும் கெய்லின் 12 சிக்ஸர் உள்ளிட்ட 23 சிக்ஸர்களை அடித்தும் 50 ஓவர்களில் 360 ரன்கள் குவித்தும் மே.இ. அணியால் வெற்றி பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே நாளில் கெய்ல், ஜேஸன் ராய், ஜோ ருட் ஆகியோரின் சதங்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.
டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அது மிகச்சரியான முடிவு என்பதுபோல் கெய்லின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள் ரசிகர்கள். கேம்ப்பெல் 30, ஷாய் ஹோப் 64, டேரன் பிராவோ 40 ரன்கள் எடுத்து கெய்லின் முயற்சிக்கு ஒத்துழைத்தார்கள். 129 பந்துகளில் 12 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் எடுத்து 47-வது ஓவரில் ஆட்டமிழந்தார் கெயில். இங்கிலாந்தின் மொயின் அலி பந்துவீச்சில் மே.இ. வீரர்கள் 9 சிக்ஸர் அடித்தார்கள். மே.இ. அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. இதனால் மே.இ. அணியின் வெற்றி அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.
அதிரடி ஆட்டத்துக்கும் இதுபோன்ற பெரிய ஸ்கோர்களை நன்றாக விரட்டும் திறமைக்கும் பேர் போன இங்கிலாந்து வீரர்கள் நேற்றும் தங்களுடைய மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டார்கள்.
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்தபோதே இவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பது தெரியவந்தது. பேர்ஸ்டோவ் 34 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு அமர்க்களமான ஒரு கூட்டணியை அமைத்தார்கள் ஜேஸன் ராயும் ஜோ ரூட்டும். 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் என்கிற நிலையை முதலில் அடைந்தார்கள். 94 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் ஒன்று அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார் ராய். 65 பந்துகளில் தனது 7-வது சதத்தை அடித்தார். இதன்பிறகு ராய் அளித்த இரு கேட்சுகளை மே.இ. அணி வீரர்கள் தவறவிட்டார்கள். இதனால் 26-வது ஓவரிலேயே 200 ரன்களை அடைந்து வலுவாக இருந்தது இங்கிலாந்து அணி. கடைசியில் ராய் 123 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்குப் பலமான அடித்தளத்தை அமைத்தது. பிறகு ரூட் அளித்த மூன்று கேட்சுகளும் தவறவிடப்பட்டன. மார்கனும் விரைவாக ரன்கள் சேர்த்து இலக்கை விரட்ட உதவினார். 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து மார்கன் ஆட்டமிழந்தார். ஆட்டன் முடியும் முன்பு 96 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து பிறகு 102 ரன்களில் ஆட்டமிழந்தார் ரூட். இதையடுத்து 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது இங்கிலாந்து அணி. ஜேஸன் ராய் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து வீரர்கள் அளித்த கேட்சுகளை ஒழுங்காகப் பிடித்திருந்தாலே வெற்றி பெற்றிருக்கும் மே.இ. அணி. ஆனால் நேற்று 360 ரன்கள் குவித்தும் அவர்களால் வெற்றியை ருசிக்கமுடியாமல் போனது.