பிசிசிஐ அமைப்புக்கு முதல் குறை தீர் நடுவரை நியமித்தது உச்ச நீதிமன்றம்

ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயினை பிசிசிஐ அமைப்பின் முதல் குறை தீர் நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்...
பிசிசிஐ அமைப்புக்கு முதல் குறை தீர் நடுவரை நியமித்தது உச்ச நீதிமன்றம்

ஐபிஎல் ஆட்டங்களில் சூதாட்டப் புகார்களை அடுத்த பிசிசிஐ அமைப்பில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், முறைகேடுகளை களைந்து கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்தவும் நீதிபதி லோதா குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. லோதா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு வெவ்வேறு காலகட்டங்களில் உச்சநீதிமன்றத்துக்குத் தனது செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இதனிடையே பிசிசிஐக்கு என புதிய சட்டவரையறை, விதிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி விரைவில் அந்த அமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது.

புதிய பிசிசிஐ சட்டவரையறைகளின்படி தன்னாட்சி பெற்ற தகராறுகளுக்கு தீர்வு காணும் தீர்ப்பாயத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டும், அதிகபட்சம் மூன்றாண்டுகள் பதவி வகிக்கலாம் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயினை பிசிசிஐ அமைப்பின் முதல் குறை தீர் நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்.     

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. இருவர் மீதான விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக பிசிசிஐ அறிவித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ சிஓஏ மனு செய்தது. தீர்ப்பாயம் நியமிக்கப்படும் வரை இருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை உடனே ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐக்குக் குறை தீர் நடுவர் நியமிக்கப்பட்டதையடுத்து பாண்டியா, ராகுல் மீதான புகார் குறித்து விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com