20 ஓவரில் 278 ரன்கள்: ஆப்கானிஸ்தான் அட்டகாச ஆட்டம் 

அயர்லாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


அயர்லாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2-ஆவது டி20 போட்டி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரதுல்லா ஸஸாய், உஸ்மான் கானி களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து அணியின் பந்துவீச்சை சிக்ஸர்களாக பறக்கவிட்டு மிரட்டியது. இதனால், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 அல்ல 100 அல்ல 150 அல்ல 200 ரன்களையும் கடந்து ரன் குவித்தது. 

உஸ்மான் கானி 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான 42 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்த நிலையில், கானி 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் சதம் அடித்த ஸஸாய், அதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. 

தொடக்க ஆட்டக்காரர் ஸஸாய் 62 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உட்பட 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூலம், அயர்லாந்து அணிக்கு 279 ரன்கள் என்கிற மிகக் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டெர்லிங், கெவின் ஓ பிரையன் ஜோடி நல்ல அதிரடியான தொடக்கத்தை தந்தது. ஆனால், வெற்றி இலக்கு 279 என்பதால் இந்த நல்ல துவக்கம் கூட சுமாரான துவக்கமாக அமைந்தது. 

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டாக கெவின் ஓ பிரையன் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஸ்டெர்லிங் 50 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் ரஷித் கான் சுழலில் சிக்கி திணறினர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியை பதிவு செய்தது. ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com