தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!

2-வது டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அதனுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது இலங்கை அணி...
தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அதனுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது இலங்கை அணி.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 61.2 ஓவர்களில் 222 ரன்கள் மட்டும் எடுத்தது. விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் 86 ரன்கள் எடுத்தார். விஸ்வா ஃபெர்ணான்டோ, கசுன் ரஜிதா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில், 37.4 ஓவர்களில் 154 ரன்களுக்குச் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் இன்னிங்ஸில் 68 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்ஸில் படு மோசமாக விளையாடியது. அந்த அணி 44.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஒருகட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் என்கிற நிலைமையிலிருந்து சரிவைச் சந்தித்தது. இலங்கை அணியின் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளையும் தனஞ்ஜெய டி சில்வா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் இந்த டெஸ்ட்டை வெல்ல  இலங்கை அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-ம் நாளின் முடிவில், இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. குஷால் மெண்டிஸ் 10, ஒஷாடா பெர்ணான்டோ 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் மெண்டிஸும் பெர்ணான்டோவும் விரைவாக ரன்கள் குவித்தார்கள். தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால் இதனால் மனமுடைந்தார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள். மெண்டிஸ் 52 பந்துகளில் 9 பவுண்டரிகளுடனும் பெர்ணான்டோ 69 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடனும் அரை சதத்தை எட்டினார்கள்.  பிறகு இருவரும் 199 பந்துகளில் 150 ரன்கள் கூட்டணியை அடைந்தார்கள். இதனால் இலங்கை அணி இன்று விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் வெற்றி பெறுவதை உறுதி செய்தார்கள். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை பரபரப்பான முறையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, 2-வது டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. குஷால் மெண்டிஸ் 84, ஒஷாடா பெர்ணான்டோ 75 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வென்றுள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் துணைக்கண்ட அணி என்கிற பெருமையை இலங்கை அணி அடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com