முதல் ஒருநாள்: இங்கிலாந்தை 66 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அபாரம்

இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிரணி அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.


இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிரணி அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 202 ரன்களையும், பின்னர் ஆடிய இங்கிலாந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தன. அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டை சாய்த்த இந்திய பந்துவீச்சாளர் ஏக்தா பிஷ்ட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஐசிசி சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்தியா-இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மிதாலி-ஜெமிமா ரன் குவிப்பு:
டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ்-ஸ்மிருதி மந்தானா ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். மந்தானா 24, தீப்தி சர்மா 7 ரன்களுக்கும் வெளியேறினர். 8 பவுண்டரிகளுடன் 48 ரன்களை விளாசி ஜெமிமா வெளியேறினார். அறிமுக வீராங்கனை ஹர்லின் தியோல் 2, மோனா மேúஷ்ராம் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.
பின்னர் கேப்டன் மிதாலி ராஜ் 44, தனியா பாட்டியா 25, ஜூலன் கோஸ்வாமி 30 ரன்களை எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.
ஷிகா பாண்டே 11, ஏக்தா பிஷ்ட் 0 என சொற்ப ரன்களுக்கு வெளியேற 49.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
இங்கிலாந்து தரப்பில் ஜார்ஜியா, நடாலி ஷிவர், சோபி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் இங்கிலாந்து  மகளிர் களமிறங்கினர். தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஏமிஜோன்ஸ் 1, டாமி பிமெளன்ட் 18, சாரா டெய்லர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் ஹீதர் நைட்டுடன்-இணைந்து சிறப்பாக ஆடி வந்த நடாலி ஷிவர் 5 பவுண்டரியுடன் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது இங்கிலாந்து  அணி 4  விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்திருந்தது.  
இங்கிலாந்து சரிவு
நடாலி ஷிவருக்கு பின் அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்து வெளியேறினர். டேனியல் வயாட் 1 கேத்ரீன் பிரன்ட் 7, ஜார்ஜியா 6 ரன்களுக்கு அவுட்டாயினர்.
3 பேர் டக் அவுட்
அன்யா சுப்சோல், சோபி, அலெக்ஸ் ஹார்ட்லி ஆகியோர் டக் அவுட்டாயினர்.கேப்டன் ஹீதர் நைட் மட்டுமே 39 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல்இருந்தார். இறுதியில் 41 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
ஏக்தா பிஷ்ட் அபாரம் 4 விக்கெட்
இந்திய தரப்பில் ஏக்தா பிஷ்ட் 25 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். தீப்தி சர்மா, ஷிகா பாண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com