முகப்பு விளையாட்டு செய்திகள்
துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த இந்தியர்கள்!
By மணிகண்டன் தியாகராஜன் | Published On : 28th February 2019 01:00 AM | Last Updated : 28th February 2019 01:00 AM | அ+அ அ- |

தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனை படைத்தனர் 2 இந்தியர்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது வீராங்கனை அபூர்வி சந்தேலாவும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் சௌரவ் சௌதரியும்தான் சாதனை படைத்த நாயகர்கள்.
சரி. இவர்கள் இருவரும் புரிந்த உலக சாதனைகள் என்ன?
தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றதுடன் இத்தனை புள்ளிகளைப் பெற்ற வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் படைத்தார் அபூர்வி.
இதுவரை எந்தவொரு வீராங்கனையும் இந்தச் சாதனையைப் படைக்கவில்லை. இதற்கு முன்பு சீன வீராங்கனை ரோஷு ஜாவ் 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
ஆடவர் பிரிவில், இளம் வீரரான சௌரவ் சௌதரி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலக சாதனை புரிந்தார். தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 245 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையையும் படைத்தார் சௌரவ். இந்த வெற்றி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார்.
இவர்கள் 2 பேர் குறித்து பார்ப்போம்.
அபூர்வி சந்தேலாவின் வெற்றி பயணம்!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிறந்தவர் அபூர்வி சிங் சந்தேலா. இவரது தந்தை குல்தீப் சிங் சந்தேலா ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜெய்ப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த அபூர்வி, தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றதை பார்த்து சிலிர்த்தார் அபூர்வி.
துப்பாக்கி சுடுதல் மீது அப்போது தான் அவருக்கு காதல் பிறந்தது. பெற்றோரிடம் தனது ஆசையைக் கூறினார். 15 வயதான அபூர்வியை ஜெய்ப்பூரில் உள்ள துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.
ஏர் ரைஃபிள், ஏர் பிஸ்டல் என இரண்டு வகைகளையும் முயற்சி செய்தார். ஏர் ரைஃபிள் ஏற்றதாக அமைய அதையே தனது பாணியாகத் தேர்வு செய்தார்.
2012ஆம் ஆண்டில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். 2014ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்ற
துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 பதக்கங்களை அள்ளி வந்தார். அவற்றில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களும், குழு பிரிவில் 2 பதக்கங்களும் வென்றார் அபூர்வி. அதே ஆண்டில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று பதக்க வேட்டையைத் தொடர்ந்தார். அதில் 206.7 புள்ளிகள் எடுத்திருந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அபூர்விக்கு பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமே.
கடந்த ஆண்டில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்புக் குழு பிரிவில் சக நாட்டவரான ரவி குமாருடன் களமிறங்கிய அபூர்வி, நாட்டுக்காக வெண்கலம் வென்று வந்தார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் தேசிய சாம்பியனான ராகேஷ் மன்பட்தான் இவரது பயிற்சியாளர். புதிய உலக சாதனைக்கு பிறகு அபூர்வி கூறுகையில், ஒவ்வொரு ஷாட்டையும் குறிவைத்து சுட்டேன். இலக்கை தவறவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். வெற்றி வசப்பட்டது. பயிற்சியாளர் கற்றுத்தந்த நுணுக்கங்களும் கைகொடுத்தன. இதையே டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பின்பற்றி சாதிக்க விரும்புகிறேன் என்றார்.
இவர், ஏற்கெனவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை அபூர்விக்கு வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
விவசாயி மகன் சௌரவ் சௌதரி!
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள கலினா என்ற கிராமத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார் சௌரவ் சௌதரி.
இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். ஜெர்மனியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) நடத்திய ஜூனியர் உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை புரிந்தவர், ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப், ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை, இளையோர் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்க வேட்டையைத் தொடர்ந்தார்.
இதில் அனைத்துப் போட்டிகளிலும் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெயரையும் வரலாற்றில் பதிவு செய்தார்.
கொரியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முந்தைய சாதனையையும் அவரே முறியடித்தார். தில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 245 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையையும் படைத்தார்.
அத்துடன், சக நாட்டு வீராங்கனையான மானு பேக்கருடன் களமிறங்கி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் சௌரவ்.
துப்பாக்கி சுடுதலை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் தனது வாழ்க்கையாக இவர் தேர்வு செய்தார். அதற்குள் இத்தனை சாதனைகளைப் படைத்த இவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்று நிச்சயம் நம்பலாம்.
விவசாயம் செய்ய பிடிக்கும். எனது கிராமத்தில் எப்போது நான் இருந்தாலும் தந்தைக்கு உதவி செய்வேன் என்று கூறும் விவசாயியின் மகனான சௌரவ் சௌதரி மேலும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகள்.