முகப்பு விளையாட்டு செய்திகள்
வீரர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐ கவலை: ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிசி உறுதி
By DIN | Published On : 28th February 2019 01:02 AM | Last Updated : 28th February 2019 01:02 AM | அ+அ அ- |

துபையில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசனைக் குழு கூட்டத்தில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐ கவலை தெரிவித்தது.
அதற்கு, அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று ஐசிசி உறுதியளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் விளையாடாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி, மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள், இந்திய ரசிகர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். ஐசிசி அமைப்பும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் உறுதியளித்தார்.
பாகிஸ்தானுடனான ஆட்டத்தை புறக்கணித்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்பதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது. இரு அணிகளும் சந்திக்க அதிக வாய்ப்புள்ளன.