முகப்பு விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறும் யோசனையில் கிறிஸ் கெயில்!
By எழில் | Published On : 28th February 2019 02:17 PM | Last Updated : 28th February 2019 02:17 PM | அ+அ அ- |

பிரையன் லாராவுக்கு அடுத்ததாக 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்த மே.இ. வீரர் என்கிற பெருமையைப் பெற்ற கிறிஸ் கெயில் உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறவுள்ளார்.
கிரனடாவில் நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் 97 பந்துகளில் 14 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 162 ரன்கள் எடுத்தார் கிறிஸ் கெயில். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களும் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையையும் அவர் ஏற்படுத்தினார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று சமீபத்தில் அறிவித்த கிறிஸ் கெயில் தன்னுடைய முடிவைத் தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
என் உடற்தகுதியில் நான் மேலும் கவனம் செலுத்தவேண்டும். அது முன்னேற்றம் அடைந்தால் கிறிஸ் கெயிலின் ஆட்டத்தை இன்னும் அதிகமாகக் காண்பீர்கள். சில விஷயங்கள் வேகமாக நடக்கும். உடற்தகுதி அடுத்தச் சில மாதங்களில் இன்னும் மாறும். பார்க்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்தது அருமையான உணர்வைத் தருகிறது. எனக்கு 40 வயதாகப் போகிறது. ஓய்வு பெறுவதாக நான் சொன்னதைத் திரும்பப் பெறலாமா? பார்க்கலாம். மெல்ல மெல்ல முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.