Enable Javscript for better performance
71 ஆண்டுகள் காத்திருப்பு முடிவு: வரலாறு படைத்தது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    71 ஆண்டுகள் காத்திருப்பு முடிவு: வரலாறு படைத்தது இந்தியா

    By DIN  |   Published on : 08th January 2019 01:13 AM  |   அ+அ அ-   |    |  

    cup

    பார்டர்-காவஸ்கர் கோப்பையுடன் இந்திய அணியினர்.

    * ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோலியின் படை சாதனை

    71 ஆண்டுக்கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிவடைந்தது.
    ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக நடடைபெற்று வரும் டெஸ்ட், டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
    பின்னர் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் அடிலெய்டில் தொடங்கியது. அதில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இதனால் 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.
    கடைசி டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் கடந்த 3-ஆம் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622-7 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தின் மாலை வேளை மழை,மோசமான வானிலையால் கைவிடப்பட்டது. 
    ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பாலோ ஆனை தொடர்ந்தது. விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்த நிலையில் நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. 316 ரன்கள் எடுத்தால் டிரா செய்யலாம் என்ற நிலையில் 5-ஆம் நாளான திங்கள்கிழமையும் மோசமான பருவநிலையால் ஆட்டம் நடைபெறவில்லை. நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் டிராவில் முடிவடைந்தது சிட்னி டெஸ்ட். இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி.
    இந்தியாவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொந்த மண்ணில் முதன்முறையாக 30 ஆண்டுகளுக்கு பின் பாலோ ஆனை தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

    ஆட்ட மற்றும் தொடர் நாயகன் புஜாரா
    ஆஸி. டெஸ்ட் தொடரில் இந்தியா கைப்பற்ற பிரதான காரணமாக இருந்த சேதேஸ்வ் புஜாரா தொடர் மற்றும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரில் அவ் 3 சதங்களை விளாசினார். மேலும் ஒட்டுமொத்தமாக 521 ரன்களை குவித்தார் அவர்.

    71 ஆண்டு காத்திருப்பு
    இந்திய அணி கடந்த 1947-48 ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை ஆஸி. மண்ணில் இந்தியா கைப்பற்றியதில்லை. இது நீண்ட நாள் ஏக்கமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கோலி தலைமையிலான அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி 71 ஆண்டுகள் காத்திருப்பை முடித்து வைத்தது.

    டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய மற்றும் இந்திய கேப்டன்
    ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய மற்றும் இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

    ஐசிசி தரவரிசையை தக்க வைத்தது
    ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தனது முதலிடத்தை உறுதி செய்ததோடு மட்டுமின்றி பார்டர்-காவஸ்கர் கோப்பையும் தக்க வைத்துக் கொண்டது இந்தியா.

    2011 உலகக் கோப்பை வெற்றியை விட இத்தொடர் வெற்றி சிறப்பானது: விராட் கோலி
    இந்த அணியைக் காட்டிலும் நான் பெருமைப்படக் கூடிய வேறு அணி எதுவுமில்லை. கடந்த 12 மாதங்களாக அணியின் கலாசார கட்டமைப்பை உருவாக்கினோம். முதன்முறையாக கேப்டனாகியது முதல் இந்த முயற்சியை எடுத்தேன். இந்த அணியை வழிநடத்தியதே எனக்கு பெருமையானது. கேப்டனாக எனது சிறப்பான தருணம். உலகக் கோப்பையை வென்ற போது நான் இளம் வீரனாக இருந்தேன். அப்போது வெற்றியின் தன்மையை நான் உணரவில்லை. 2011 உலகக் கோப்பை வெற்றியை விட இத்தொடர் வெற்றி சிறப்பானது.
    ஆஸி.க்கு மூன்று முறை நான் வந்து ஆடியுள்ளேன். இப்போது தான் எனக்கு புலப்படுகிறது. நாங்கள் சாதித்ததை வேறு எவரும் செய்யவில்லை. இந்த தொடர் வெற்றி நமது அணிக்கு புதிய அடையாளத்தை தரும். புஜாரா முன்பு இங்கு வந்ததை விட, இத்தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். மயங்க் அகர்வாலையும் குறிப்பிட வேண்டும். பாக்ஸிங் டே டெஸ்டில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். அதே போல் இளம் வீரர் ரிஷப் பந்த்தும் சுயமாக எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
    நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதால், பெளலர்களும் அபாரமாக வீசத் தொடங்கினர். இத்தொடர் முழுவதும் இந்திய பெளலர்கள் தான் ஆட்டத்தின் போக்கையே தீர்மானித்தனர். முந்தைய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களிலும் இதே நிலை தான். 4 பெளலர்களுடன் ஆடி அயல்நாடுகளில் வெற்றிகளை பெறுவது என்பது நான் கண்டிராத ஒன்று. பிட்சின் தன்மை குறித்து கவலைப்படவில்லை. தங்கள் உடல்தகுதி குறித்து தான் கவனம் கொண்டனர். இது இந்தியாவின் வளர்ந்து வரும் பெளலர்களுக்கும் சிறந்த வெளிப்பாடாகும். மே.இ.தீவுகளின் ஜாம்பவான் பெளலர்களின் சாதனையையும் தகர்த்தது சிறப்பு வாய்ந்தது. இந்திய அணி வீரர்களின் வயது சராசரியும் மிகவும் குறைவாகும். முந்தைய இரு தொடர்களிலும் நமது அணி சரியான பாதையில் செல்கிறது என நம்பினோம். தற்போது அதற்கான முடிவு வெளிப்பட்டுள்ளது.நாம் கற்பனையில் நினைக்காதவற்றை கூட கடவுள் வழங்குவார். ஆஸி.அணி கடும் போட்டியை ஏற்படுத்தும் அணி தான். ஒவ்வொரு அணியிலும் மாற்றங்கள் நிகழும் தான். டிம் பெய்னுக்கு எனது வாழ்த்துகள்.

    உலகிலேயே சிறந்தது இந்திய வேகப்பந்து வீச்சு: ஆஸி. கேப்டன் பெய்ன்
    இந்தியாவுக்கு இந்த வெற்றி உரியது. அங்கு சென்று ஆடும் போது, கடினமான சூழல் உள்ளதை நாங்களும் உணருவோம். வெளிநாட்டில் வந்து தொடரை கைப்பற்றுவதற்கு சிறந்த முயற்சி தேவை. அடிலெய்டில் வெல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டோம். பெர்த்தில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 2 டெஸ்ட்களில் நாங்கள் சோபிக்கவில்லை. இந்த தொடரில் புதிய திறமை வாய்ந்த வீரர்கள் அடையாளம்ó கண்டுள்ளோம். உலகிலேயே தற்போது சிறந்த வேகப்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் ஆடினோம். ரன்களை குவியுங்கள் என்பதே எங்களுக்கு கிடைத்த செய்தி. கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. தற்போது மனச்சோர்வுடன் உள்ளோம். கண்டிப்பாக இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவோம்.

    நான் இடம் பெற்ற அணிகளில் இதுவே சிறந்தது: புஜாரா
    இந்திய வீரர்களுக்கு உணர்ச்சிமயமான தருணம் இது. அயல்நாட்டு தொடரை வெல்ல நாங்கள் கடுமையாக பாடுபட்டோம். அதுவும் ஆஸி. மண்ணில் எளிதானதில்லை. அடிலெய்டில் அடித்த சதம் சிறப்பானது. இது தொடரில் 1--0 என முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது. வேகம் மற்றும் பெளன்ஸை அனுமானித்து ஆட வேண்டும். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து சூழல்கள் வெவ்வேறானவை. கவுண்டி கிரிக்கெட்டும் எனக்கு மிகவும் உதவியது. நமது பெளலர்களுக்கு பாராட்டுகள். 20விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சிரமமானது. அடுத்த டெஸ்ட் தொடருக்கு 6 மாதங்கள் 
    உள்ளன. அதுவரை உள்ளூர் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவேன். ஒரு நாள் அணியில் இடம் பெற தீவிரமாக முயல்வேன். எனது ஓரே முன்னுரிமை டெஸ்ட் ஆட்டம் தான்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp