இந்திய அணியில் விளையாட அபினவ் முகுந்துக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா?

தேர்வுக்குழு வேறு வீரர்களைத் தேடிச்செல்ல அவரே காரணமாக அமைந்துவிட்டார்... 
இந்திய அணியில் விளையாட அபினவ் முகுந்துக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா?

தில்லிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் நேற்று சதமடித்துள்ளார் அபினவ் முகுந்த். இதனால் இந்திய அணியில் விளையாட அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

2011-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான முகுந்த் இதுவரை 7 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் விளையாட ஆரம்பித்தபோது சேவாக், கம்பீர் அளித்த போட்டியைச் சமாளிக்கவேண்டியிருந்தது. அதன்பிறகு விஜய், தவன், ராகுல் என அடுத்து வந்தவர்கள் முகுந்தைத் தாண்டிச் சென்றார்கள். இந்நிலையில் இந்த வருட ரஞ்சிப் போட்டியில் 8 ஆட்டங்களில் 3 சதங்கள் ஒரு அரை சதம் என இதுவரை 622 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் முகுந்துக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்றால் தற்போதைய நிலைமை அவருக்குச் சாதகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

2016-17 ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் 10-ல் இடம்பிடித்தார் தமிழகத்தின் அபினவ் முகுந்த். இதனால் 2017-ல் இரு டெஸ்டுகளில் விளையாடவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் 81 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர்களில் விஜய், தவன், ராகுல் ஆகியோருக்கு அடுத்த நிலையில் முகுந்த் தான் இருந்தார். எனினும் இந்த ஒரு சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேர்வுக்குழு வேறு வீரர்களைத் தேடிச்செல்ல அவரே காரணமாக அமைந்துவிட்டார். 

2017-18 ரஞ்சியில் முகுந்த் மட்டுமல்ல, எந்தவொரு தமிழக வீரரும் சரியாக விளையாடவில்லை. அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஒரு தமிழ்நாட்டு வீரரும் இடம்பெறவில்லை. இதனால் இப்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கான மூன்று புதிய இடங்களுக்குப் போட்டியிட ஒரு தமிழக வீரராலும் முடியாமல் போய்விட்டது. கடந்த வருடம் அதிக ரன்கள் (1160) எடுத்த மயங்க் அகர்வால் இன்று இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறிவிட்டார். 6 ரஞ்சி ஆட்டங்களில் 537 ரன்கள் எடுத்த பிருத்வி ஷா, இன்னொரு சச்சினாக உருவாக வாய்ப்புண்டா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்.  ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும்தான் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். இந்நிலையில் இன்னும் ஒரே ஒரு இடம் மட்டும்தான் உள்ளது. அது யாருக்குச் செல்லப்போகிறது?

பஞ்சாப்பின் ஷுப்மன் கில் பற்றி வியக்காத கிரிக்கெட் வீரர்களே கிடையாது. 5 ஆட்டங்களில் 720 ரன்கள் எடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அசத்தி வருகிறார். பெங்லாலின் இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரனும் சிறப்பாக விளையாடி வருகிறார். இனிமேல் இந்திய அணிக்கு விஜய், ராகுல், தவன் என மூன்று பேரும் வேண்டாம் என தேர்வுக்குழு முடிவெடுத்தால் இந்த இருவரில் ஒருவர் இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டு. கர்நாடகாவின் சம்ரத்தும் விதர்பாவின் 33 வயது ஃபயஸ் ஃபஷலும் போட்டியில் உள்ளார்கள். 

எனில் முகுந்த் அவ்வளவுதானா?

அப்படி ஒரேடியாக நம்பிக்கை இழக்கமுடியாது. கடந்த மாதம், ஹிமாசல பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் சதமடித்தார் முகுந்த். இதன்மூலம் ரஞ்சி போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற சாதனையை அவர் படைத்தார். நீண்டகாலமாக விளையாடினாலும் முகுந்துக்கு 29 வயதுதான் ஆகிறது. எனவே இன்னும் இரு வருடங்களாவது இந்திய அணியின் கதவைத் தட்ட அவருக்கு வாய்ப்புள்ளது. அடுத்த வருட ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை அவர் பிடித்துவிட்டால் தேர்வுக்குழுவின் பார்வையில் மீண்டும் படலாம். அப்போது திருப்பங்கள் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவேண்டும் என்கிற முகுந்தின்  கனவு நிறைவேற இன்னும் அவர் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com