பாண்டியா, கேஎல் ராகுல் இரு ஆட்டங்களில் விளையாடத் தடை: வினோத் ராய் பரிந்துரை!

பாண்டியா, கே.எல். ராகுல் ஆகிய இருவரும் இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கவேண்டும் என வினோத் ராய் பரிந்துரை...
பாண்டியா, கேஎல் ராகுல் இரு ஆட்டங்களில் விளையாடத் தடை: வினோத் ராய் பரிந்துரை!

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அந்த நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்குமாறு இருவருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காஃபி வித் கரன் என்ற பெயரில் உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாண்டியா மற்றும் ராகுல் பங்கேற்றிருந்தனர். அப்போது இரவு விடுதி நிகழ்வுகளை மையப்படுத்தி பெண்கள் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பாண்டியா, ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் அதிருப்தியையும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு பாண்டியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.

பாண்டியா தனது கருத்துக்காக ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், பிசிசிஐ நோட்டீஸுக்கு அளித்துள்ள பதிலில், எனது கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்ப பதிலளித்தேனே தவிர, தனிப்பட்ட முறையில் எவரது உணர்வுகளையும், மதிப்புகளையும் காயப்படுத்த அவ்வாறு பேசவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகிய இருவரும் இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கவேண்டும் என வினோத் ராய் பரிந்துரை செய்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: பாண்டியாவின் விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை. இரு வீரர்களுக்கும் இரு ஆட்டங்கள் தடை விதிக்க நான் பரிந்துரை செய்துள்ளேன். நிர்வாகக் குழுவில் உள்ள மற்றொரு உறுப்பினரான டயனா எடுல்ஜி இதற்கு ஒப்புக்கொண்டால் இறுதி முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இரு வீரர்களுக்கும் சட்டப்படி தடை விதிக்கமுடியுமா என டயானா ஆராய்ந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை இரு வீரர்களும் அப்படிப் பேசியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com