4-ஆவது வரிசை பேட்டிங்குக்கு தோனி தான் உகந்தவர்: கோலியிடம் இருந்து மாறுபடும் ரோஹித்

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், தோனி தான் உகந்த 4-ஆவது வரிசை பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், தோனி தான் உகந்த 4-ஆவது வரிசை பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டிக்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா,  

"தனிப்பட்ட முறையில், 4-ஆவது வரிசை பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவது தான் அணிக்கு உகந்ததாக இருக்கும் என்று எனக்கு எப்போதும் தோன்றும். ஆனால், எங்களிடம் ராயுடு இருக்கிறார். அவர் 4-ஆவது வரிசை பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால், பயிற்சியாளரும் மற்றும் கேப்டனும் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை சார்ந்தே உள்ளது. தனிப்பட்ட முறையில் கேட்டால், தோனி 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவதே எனக்கு மகிழ்ச்சி. 

தோனியின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டை ஒட்டுமொத்தமாக பார்த்தால் அது ஏறக்குறைய 90 ஆக உள்ளது. இன்று முற்றிலும் வேறு மாதிரியான சூழ்நிலை. அவர் களமிறங்கும் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்து. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா நன்றாக பந்துவீசிக் கொண்டிருந்தது. களத்தில் இறங்கி கூட்டணி அமைத்து எளிதில் 100 ரன்களை எடுத்துவிடமுடியாது. அதனால், சற்று நேரம் எடுத்துக்கொண்டோம். நான் கூட வழக்கம் போல் அல்லாமல் சற்று மெதுவாகவே ரன் குவித்தேன். 

நான் எனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டேன். காரணம், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தகொண்டிருந்தபோது, நாங்கள் அந்த கூட்டணியை அமைக்கவேண்டும். இல்லையெனில் போட்டி அந்த நேரத்திலேயே முடிவுக்கு வந்திருக்கும். அதனால், நிறைய பந்துகளில் ரன் எடுக்காமல் கூட்டணியை கட்டமைத்தோம். 

அவருக்கு இது மிக எளிது, பெரிதாக குழப்பிக்கொள்ள மாட்டார். நாங்கள் கூட்டணியை கட்டமைப்பது குறித்து தான் பேசினோம். அந்த நேரத்தில் அது தான் முக்கியம். அவர் 5-ஆவது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கியது மகிழ்ச்சியளித்தது. நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தோம், ஆனால் ரன்களை எடுப்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அவர், அணியின் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்து ரன் குவிக்க தயார் என்பதை கடந்த காலங்களில் காண்பித்துள்ளார். 

ஒரு சில பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்று எங்களுக்கு தெரியும். துரதிருஷ்டவசமாக, நாங்கள் தவறான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். முதல் 3 விக்கெட்டுகளுக்கு பிறகு, கூட்டணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். துரதிருஷ்டவசமாக, தோனி ஆட்டமிழந்தார். இனிமேல் மிக கடினமாக இருக்கும் என்பது தெரிந்தது. 

இது கிரிக்கெட்டில் சகஜம். இதுபோன்ற போட்டிகள் பேட்ஸ்மேனாக நிறைய கற்றுத் தரும். விக்கெட்டுகளை இழக்கும் போது எப்படி கையாள வேண்டும் என்பது போன்றவற்றை இதுபோன்ற போட்டிகள் கற்றுத் தரும். ஆனால், தற்போது கற்றதை வெளிப்படுத்தி நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டும்.  

இதுபோன்ற நேரங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் மிகவும் அதிகமாக இருந்தது. எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும், வந்த உடனே அதிரடியாக விளையாடுவது எளிதானது அல்ல.  

ஆச்சரியமளிக்கும் வகையில், பந்து சற்று ஸ்விங் ஆனது. அதனால், புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு தங்களை உகந்தவாறு மாற்றிக்கொள்வது சற்று கடினமாக இருந்தது. இது கவலை அளிக்கும் லிஷயம் அல்ல. ஆனால், விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம். சில சமயங்களில் 6, 7, மற்றும் 8-ஆவது வரிசை பேட்ஸ்மேன்கள் முக்கியமான ரன்களை குவிக்க நேரிடும். அதனை புவனேஷ்வர் குமார் சிறப்பாக செய்தார், ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு இல்லை.  

நாங்கள் எடுக்கும் இந்த ரன்கள், அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும். துரதிருஷ்டவசமாக ஆஸ்திரேலியாவில் நான் சதம் அடித்த 4 போட்டிகளிலுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. அதை நான் மாற்றவேண்டும். நான் சதம் அடித்தால், அந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதையும் உறுதி செய்யவேண்டும். 

டிஆர்எஸ் கேட்பது மிகவும் தந்திரமானது. பேட்ஸ்மேன்களிடம் உரையாட எங்களுக்கு 15 விநாடிகள் கூட இல்லை. வெறும் 5 முதல் 7 விநாடிகள் தான் உள்ளது. அந்த பந்து ஸ்டம்புக்கு வெளியே சென்றதாக ராயுடு நினைத்தார். நானும் அதை தான் எண்ணினேன். நடந்துமுடிந்த பிறகு இதுபோன்ற முடிவுகள் குறித்து சிந்திக்க கூட மாட்டோம். எல்லா நேரங்களிலும் நாம் சரியாக இருக்க முடியாது. 

டிஆர்எஸ்-ஐ சரியாக பயன்படுத்துவது முக்கியமானது. அடிலெய்ட் சென்ற பிறகு, இதுகுறித்து பேசுவோம். இது எங்களுக்கு பாடம். எது நடந்ததோ அது நடந்துமுடிந்தது" என்றார்.     

இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து 133 ரன்கள் குவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com