3-ஆவது டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்: வெற்றி பெறுமா பாகிஸ்தான்?

தென் ஆப்பிரிக்காவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் 381 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


தென் ஆப்பிரிக்காவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் 381 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. 

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 262 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 34 ரன்களிலும், ஆம்லா 42 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்நிலையில், ஆம்லா மற்றும் டி காக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடித்த ஆம்லா 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 6-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்தது. 

எனினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் சதம் அடித்து அசத்தினார். துரிதமாக ரன் குவித்து வந்த அவர் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவு ரன் சேர்க்காததால் அந்த அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இமாம் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அசார் அலி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் சரிந்தபோதும், இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷபிக் மற்றும் பாபர் அசாம் சற்று துரிதமாக ரன் சேர்த்தனர். இவர்கள் 3-ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் வெற்ற பெற பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. ஷபிக் 48 ரன்களுடனும், பாபர் அசாம் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com