முதல் ஒரு நாள் ஆட்டம்: ஆஸி.க்கு முதல் வெற்றி; ரோஹித் சதம் வீண்

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
முதல் ஒரு நாள் ஆட்டம்: ஆஸி.க்கு முதல் வெற்றி; ரோஹித் சதம் வீண்

ஆஸி. 288/5, இந்தியா 254/9 , *10,000 ரன்களை கடந்த தோனி
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 ரோஹித் சர்மாவின் அபார சதம் விழலுக்கு இறைத்த நீரானது.
 இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் 2--1 என டெஸ்ட் தொடரை கைப்பறறி வரலாறு படைத்தது இந்தியா. இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டம் சிட்னியில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 அந்த அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பின்ச், அலெக்ஸ் கரே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே ஆஸி.க்கு அதிர்ச்சியாக அமைந்தது. 6 ரன்கள் எடுத்த பின்ச், புவனேஸ்வர் பந்திலும், 24 ரன்கள் எடுத்த அலெக்ஸ், குல்தீப் யாதவ் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
 உஸ்மான் கவாஜா-ஷான் மார்ஷ் நிதானம்:
 பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஷ்-உஸ்மான் கவாஜா இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. உஸ்மான் கவாஜா 6 பவுண்டரியுடன் 81 பந்துகளில் 59 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யு ஆனார். ஷான் மார்ஷ் 4 பவுண்டரியுடன் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்தனர். கவாஜா தனது 5-ஆவது அரைசதத்தையும், ஷான் மார்ஷ் தனது 13-ஆவது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.
 பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அதிரடி:
 பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 61 பந்துகளில் 73 ரன்களை எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். இது அவரது 2-ஆவது அரைசதமாகும்.
 அவருக்கு பக்கபலமாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 47 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்தது.
 இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 2-66, குல்தீப் யாதவ் 2-54, ரவீந்திர ஜடேஜா 1-48 விக்கெட்டை வீழ்த்தினர்.
 சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய வீரர்கள்:
 பின்னர் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். எனினும் ஷிகர் தவன் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி பெஹ்ரன்டர்ப் பந்தில் டக் அவுட்டானார்.
 அவரைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி 3, அம்பதி ராயுடு 0 ரன்களுக்கு அவுட்டாயினர்.
 தோனி-ரோஹித் ரன் குவிப்பு:
 மூத்த வீரர் தோனி-ரோஹித் இணைந்து ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 137 ரன்களை சேர்த்தனர். தோனி 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 96 பந்துகளில் 51 ரன்களை எடுத்து பெஹ்ரன்டர்ப் பந்தில் ஆட்டமிழந்தார்.
 ரோஹித் சர்மா அதிரடி சதம்:
 தினேஷ் கார்த்திக் 12 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், ஹை ரிச்சர்ட்சன் பந்தில் போல்டானார்.
 அதிரடியாக ஆடியரோஹித் 6 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 129 பந்துகளில் 133 ரன்களை குவித்து ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
 குல்தீப் யாதவ் 3 ரன்களுடன் சிடில் பந்திலும், முகமது ஷமி ஸ்டாய்னிஸ் பந்திலும் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
 புவனேஸ்வர் குமார் நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க முயன்றார். 29 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 254 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.
 ஹை ரிச்சர்ட்ஸன் அபாரம்:
 ஆஸி. தரப்பில் ஹை ரிச்சர்ட்சன் அபாரமாக பந்துவீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். பெஹ்ரன்டர்ப் 2-39, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2-66 விக்கெட்டை வீழ்த்தினர்.
 இறுதியில் 34 ரன்கள்வித்தியாசத்தில் முதல் ஆட்டத்தில் வென்றது ஆஸி. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
 ஆட்ட நாயகன் ஹை ரிச்சர்ட்சன்:
 சிறப்பாக பந்துவீசி 26 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டை வீழ்த்திய ஹை ரிச்சர்ட்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 ரோஹித் சர்மா 22ஆவது சதம்: கங்குலி சாதனையை சமன் செய்தார்
 அபாரமாக ஆடி 133 ரன்களை குவித்த ரோஹித் சர்மா தனது 22 ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் செளரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார். சச்சின் 49, விராட் கோலி 38 சதங்களுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
 10 ஆயிரம் ரன்களை கடந்தார் தோனி:
 அதே நேரத்தில் தோனி ஒரு நாள் ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு டெண்டுல்கர், திராவிட், விராட் கோலி, கங்குலி ஆகியோர் இச்சிறப்பை பெற்றுள்ளனர். தோனி இந்த ஆட்டத்தில் தனது 68-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் மொத்தம் 330 ஒரு நாள் ஆட்டங்களில் 49.75 சராசரியுடன் மொத்தம் 10, 050 ரன்களை சேர்த்தார். இதில் 9 சதம், 68 அரை சதம் அடங்கும். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 13-ஆவது வீரர் தோனி ஆவார்.
 கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் குவித்த ஆஸி.:
 ஹேன்ட்ஸ்கோம்ப்-மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் 5-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். மேலும் கடைசி 10 ஓவர்களில் ஆஸி அணி அதிரடியாக 93 ரன்களை சேர்த்தது.
 அபாரமான ஆஸி பந்துவீச்சு:
 இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹை ரிச்சர்ட்ஸன்4 விக்கெட், பெஹ்ரண்டர்ப் 2 விக்கெட் ஆகியோர் இந்திய பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.
 குறுகிய காலத்தில் 3 விக்கெட்டை இழந்ததே திருப்புமுனை: விராட் கோலி
 ஆஸி.யுடன் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியுற்ற நிலையில் கோலி கூறியதாவது:
 எங்கள் ஆட்டம் திருப்தி தரவில்லை. இந்த பிட்சில் 280 ரன்களை எளிதாக சேஸ் செய்ய முடியும் என கருதினோம். ஆனால் குறுகிய நேரத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது திருப்பு முனையை ஏற்படுத்தி விட்டது. ரோஹித் அபாரமாக ஆடினார். அவருக்கு தோனி பக்கபலமாக இருந்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும். தோனி தவறான நேரத்தில் அவுட்டானார். மேலும் ஒரு பேட்டிங் இணை இருந்திருந்தால் வெற்றி வசமாகி இருக்கும்.
 தவன், ராயுடு, நான் ஆகியோர் அவுட்டானது எதிர்பாராதது, ஒரு நாள் ஆட்டத்தில் இவை நடைபெறும். முடிவுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அணி எவ்வாறு மேம்படுகிறது என்பதே முக்கியம் என்றார்.
 ஆஸி. கேப்டன் பின்ச்: அணியின் ஆட்டம் மகிழ்ச்சி தருகிறது. டெஸ்ட் தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்துள்ளோம். ரோஹித்-தோனி ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றனர். ஆனால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எங்கள் பெளலர்கள் வீழ்த்தினர். உஸ்மான் கவாஜா-ஷான் மார்ஷ் இணை மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடினர். பீட்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹை ரிச்சர்ட்ஸன், பெஹ்ரண்டர்ப் ஆகியோர் நம்பிக்கையுடன் பந்துவீசினர். கடைசி வரிசையில் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் அதிரடி பேட்டிங்குக்கு உதவியாக இருந்தனர் என்றார்.

1000-ஆவது சர்வதேச வெற்றி: சாதனை படைத்தது ஆஸி.
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டத்திலும் சேர்த்து 1000-ஆவது சர்வதேச வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 
கிரிக்கெட்டில் முன்னணி அணியான ஆஸ்திரேலியா கடந்த 1877-இல் மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 
1951 நவம்பரில் இல் பிரிஸ்பேன் டெஸ்டில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 100-ஆவது வெற்றியை பெற்றது. 1981-இல் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் 200-ஆவது வெற்றியையும், 1989 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் 300-ஆவது வெற்றியும் பெற்றது.
500-ஆவது வெற்றி: மேலும் 1994 டிசம்பர் சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் 400-ஆவது வெற்றியையும், 1999 நவம்பர் பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் 500-ஆவது வெற்றியையும் பதிவு செய்தது. 2003 மே மாதம் பிரிட்ஜ்டவுனில் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்டில் 600-ஆவது வெற்றி, 2006 செப்டம்பர் கோலாலம்பூரில் இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் 700-ஆவது வெற்றியையும் பெற்றது.
தொடர்ந்து 2010 ஜனவரியில் பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் 800-ஆவது வெற்றி, 2014  ஜனவரி மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் 900-ஆவது வெற்றியையும் பதிவு செய்தது.
1000-ஆவது வெற்றி: இதன் தொடர்ச்சியாக சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி தனது 1000-ஆவது சர்வதேச வெற்றியுடன் சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com