2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி. அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது. அலெக்ஸ் கரே, கேப்டன் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கமே சரிவு: ஆனால் ஆஸி.க்கு தொடக்கமே சரிவாக அமைந்தது. கேப்டன் பின்ச் 6 ரன்களோடு புவனேஸ்வர் பந்தில் போல்டானார். அலெக்ஸ் கரே 18 ரன்களோடு ஷமி பந்தில் தவனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். உஸ்மான் கவாஜா 3 பவுண்டரியோடு 21 ரன்கள் எடுத்திருந்த போது, ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களையே ஆஸி. அணி எடுத்திருந்தது.
ஷான் மார்ஷ் விஸ்வரூபம்: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கடந்த சில ஆட்டங்களாக சரிவர ஆடாத நிலையில் இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடினார். அவரும், பீட்டரர் ஹேன்ட்ஸ்கோம்பம் இணைந்து ரன்களை சேர்க்க முயன்றனர். 
மார்ஷ் ஒருபுறம் நிலைத்து ஆடினாலும், பீட்டர் 20, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் அதிரடி வீரர் மேக்ஸ்வேல்-ஷான் மார்ஷ் இணைந்து கடைசி ஓவர்களில் அபாரமாக ஆடினர். 1 சிக்ஸர், 5 பவுண்டரியோடு 37 பந்துகளில் 48 ரன்களை விளாசிய மேக்ஸ்வெல் , புவனேஸ்வர் பந்தில் வெளியேறினார்.
ஷான் மார்ஷ் 131: அணியின் ஸ்கோரை உயர்த்தி சரிவில் இருந்து மீட்ட ஷான் மார்ஷ் 3 சிக்ஸர், 11 பவுண்டரியோடு 123 பந்துகளில் 131 ரன்களை சேர்த்து புவனேஸ்வர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜாய் ரிச்சர்ட்ஸன் 2, நாதன் லயன் 12, பீட்டர் சிடில் 0 என சொற்ப ரன்களில் வெளியேறினர். பெர்ஹன்டர்ப் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது ஆஸி. அணி.
புவனேஸ்வர், ஷமி அபாரபந்துவீச்சு: இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 45 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். அவருக்கு துணையாக முகமது ஷமியும் 58 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டை சாய்த்தார். ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
299 ரன்கள் இலக்கு: 299 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ஷிகர் தவன்--ரோஹித் சர்மா களமிறங்கினர். 
தவன்-ரோஹித் இணை அதிரடி: முதல் ஆட்டத்தில் டக் அவுட்டான தவன், இந்த ஆட்டத்தில் துவக்கத்திலேயே அதிரடி காண்பித்தார். 5 பவுண்டரியோடு 32 ரன்கள் எடுத்து பெர்ஹன்டர்ப் பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் ரோஹித் சர்மா தலா 2 சிக்ஸர், பவுண்டரியோடு 52 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஸ்டாய்னிஸ் பந்தில் அவுட்டானார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு இணைந்து 47 ரன்களை சேர்த்தனர்.
அவருக்கு பின் அம்பதி ராயுடு 24 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் அவுட்டானார்.
கோலி-தோனி இணை விளாசல்: கேப்டன் கோலி-மூத்த வீரர் தோனி இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஹை ரிச்சர்ட்ஸன் பந்தில் அவுட்டானார். 
தோனி 2 சிக்ஸருடன் 54 பந்துகளில் 55 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 25 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. 4 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. கடைசி ஆட்டம் மெல்போர்னில் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆட்ட நாயகன் கோலி: அபாரமாக ஆடி 104 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
39-ஆவது ஒரு நாள் சதமடித்த கோலி: இந்த ஆட்டத்தில் கோலிஅடித்தது அவர் ஒருநாள் ஆட்டங்களில் அடித்த 39-ஆவது சதமாகும். ஆஸி.க்கு எதிராக 6-ஆவது சதமாகும். அனைத்து வகை ஆட்டங்களிலும் இது 64 ஆவது சதமாகும். சச்சின் 100, ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். குமார் சங்ககரா 63 சதங்களை எடுத்துள்ளார்.
ரோஹித்--தவன் இணை 4000 ரன்கள் சாதனை: தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-தவன் இணை இணைந்து ஒரு நாள் ஆட்டங்களில் 4000 ரன்களை சேர்த்த 4-ஆவது இணை என்ற சாதனையை படைத்தனர். இதற்க முன்பு சச்சின்-கங்குலி இணை இந்த சாதனையை படைத்த முதல் இணையாகும்.
76 ரன்கள் கொடுத்த அறிமுக வீரர் முகமது சிராஜ்: அறிமுக ஆட்டத்திலேயே 76 ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது இந்திய வீர்ர முகமது சிராஜ் ஆவார். 
இதற்கு முன்பு கர்ஸன் காவ்ரி 1975-இல் இங்கிலாந்துக்கு எதிராக 11 ஓவர்களில் 83 ரன்களை விட்டுக்கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

ஆஸி. வசம் இருந்த ஆட்டத்தை திசை திருப்பினோம்
விராட் கோலி கூறியதாவது-இந்த வெற்றி மகிழ்ச்சி தருகிறது. கடைசி வரை ஆஸி. வீரர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என தீர்மானித்து செயல்பட்டோம். மார்ஷ், மேக்ஸ்வெல்லை அடுத்ததடுத்த பந்துகளில் அவுட்டாக்கினோம். புவனேஸ்வர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசினார். விஜய்சங்கரும் அணியில் இருந்து எங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை அளித்தது. ஆஸி.அணியிடம் இருந்த ஆட்டத்தை நாங்கள் திசை திருப்பி விட்டோம். களைப்பாக இருந்தாலும் தோனி தனது பங்கை சிறப்பாக ஆற்றினார். மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளார். தினேஷும் தனது பங்கை அளித்தார்.
பின்ச் கூறியதாவது: தோனி-கோலிக்கு வெற்றி உரியது
நாங்கள் இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடினோம். எனினும் இந்திய வீரர்கள் கோலி-தோனிக்கு இந்த வெற்றி உரியதாகும். தொடக்க வரிசையில் என்னால் ரன்களை சேர்க்க முடியவில்லை. இது சிக்கலை ஏற்படுத்துகிறது. அணிக்கு உதவியாக ரன்களை சேர்க்க இயலவில்லை. ஷான் மார்ஷ் நிலைத்து ஆடியதால் ஸ்கோர் உயர்ந்தது. சொந்த மைதானமான மெல்போர்னில் கடைசி ஆட்டத்தில் வென்று 2-1 என தொடரை கைப்பற்றுவோம். 

கலீல் அகமதுவை கண்டித்த தோனி
அடிலெய்டில் ஆஸி. அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தின் போது பதிலி வீரரான கலில் அகமதுவை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோனி-தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடைசி கட்டத்தில் தேனீர் இடைவேளையின்போது அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை கொடுப்பதற்காக வந்த கலீல் அகமது பிட்சின் மீது ஓடிவந்தார். இதை பார்த்த தோனி அவரை கடுமையாக கண்டித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com