ரஞ்சி: முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது கேரள அணி!

இரண்டு முன்னேற்றங்களும் பயிற்சியாளர் டேவ் வாட்மோரின் சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன...
ரஞ்சி: முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது கேரள அணி!

குஜராத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது கேரள அணி.

வயநாட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கேரள அணி, 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஒரு வீரரும் அரை சதம் எடுக்கவில்லை. சிந்தன் கஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் கேரள அணியை விடவும் மோசமாக விளையாடி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத் அணி. கேரளாவின் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் முன்னிலை பெற்ற கேரள அணி, 2-வது இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் காலிறுதியில் வெற்றி பெற குஜராத் அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் குஜராத் அணி, மிக மோசமாக விளையாடி 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேரளாவின்  பசில் தம்பி 5 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ரஞ்சி வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது கேரள அணி. 

கடந்த வருடம் முதல்முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்ற கேரள அணி, இந்தமுறை ஒரு படி முன்னேறி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இரண்டு முன்னேற்றங்களும் பயிற்சியாளர் டேவ் வாட்மோரின் சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன. 

அரையிறுதியில் விதர்பா அல்லது உத்தரகண்டைச் சந்திக்கவுள்ளது கேரள அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com