இந்தப் பாரம்பரியத்தையும் மீட்போமா?: சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் நடைபெறுமா பொங்கல் டெஸ்ட்?

ஜனவரி வந்தாலே சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் எப்போது திறக்கும் என்கிற ஆர்வம்தான்...
இந்தப் பாரம்பரியத்தையும் மீட்போமா?: சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் நடைபெறுமா பொங்கல் டெஸ்ட்?

பொங்கல் சமயத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்ற பொங்கல் டெஸ்டுகள்தான் ஞாபகத்துக்கு வரும். 1967-ல் தொடங்கிய முதல் பொங்கல் டெஸ்ட் ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிராக) டிராவில் முடிந்தது.

அதற்குப் பிறகு 1973, 75, 77, 79, 80, 82, 85, 88 என கடகடவென 9 பொங்கல் டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்றுள்ளன. ( நவம்பர் 1976, செப்டம்பர் 1979, செப்டம்பர் 1982, டிசம்பர் 1983, செப்டம்பர் 1986, பிப்ரவரி 1987 ஆகிய ஆண்டுகளிலும் சென்னையில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது 1973 முதல் 1988 வரை 15 ஆண்டுகளில் சென்னையில் 14 டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன.)

யோசித்துப் பாருங்கள், ஜனவரி வந்தாலே சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் எப்போது திறக்கும் என்கிற ஆர்வம்தான் அதிகமாக இருந்திருக்கும். எனினும் 1988-ல் பொங்கல் டெஸ்டுக்கு ஒரேடியாக மூட்டைக் கட்டிவிட்டார்கள். என்ன காரணம்? கிரிக்கெட் ஆட்டங்கள் சரிசமமாக எல்லா மையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் ஐசிசி அட்டவணையைப் பின்பற்றவேண்டிய கடமையும் பிசிசிஐக்கு உள்ளதால் பொங்கல் டெஸ்டை நடத்தமுடியாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனால் என். சீனிவாசனே பிசிசிஐ தலைவராக இருந்தபோது இதில் ஆர்வம் செலுத்தாதபோது வேறு யாரைக் குறை சொல்லமுடியும்?

இதிலுள்ள இன்னொரு கொடுமை என்னவென்றால் இப்போது, சென்னையில் பொங்கல் டெஸ்ட் மட்டுமில்லை, டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுவதே அரிதான விஷயமாகிவிட்டது. 15 ஆண்டு இடைவெளியில் 14 டெஸ்டுகள் நடைபெற்ற சென்னை சேப்பாக்கத்தில், கடந்த 10 வருடங்களில் நான்கு டெஸ்ட் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் முக்கியமான டெஸ்ட் மையங்களில் குறைவான டெஸ்டுகளை நடத்திய மைதானம், சேப்பாக்கம் தான்! இந்தக் குறையையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சரிசெய்யவேண்டும்.

பொங்கல் டெஸ்ட் என்கிற பாரம்பரியத்தை நிச்சயம் காப்பாற்றியாகவேண்டும், சென்னையில் பொங்கல் டெஸ்ட் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதே சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கை. பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com