ஆஸி. மண்ணில் இரட்டை தொடர் வெற்றியை பெற இந்தியா தீவிரம்!

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போல், இரு தரப்பு முதல் ஒரு நாள் ஆட்டத் தொடரையும் கைப்பற்றி,
பயிற்சியின் போது ஆலோசனையில் ஈடுபட்ட இந்திய அணியினர்.
பயிற்சியின் போது ஆலோசனையில் ஈடுபட்ட இந்திய அணியினர்.


ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போல், இரு தரப்பு முதல் ஒரு நாள் ஆட்டத் தொடரையும் கைப்பற்றி, இரட்டை தொடர்களை வெல்லும் நோக்கில் உள்ளது இந்திய அணி.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. சிட்னி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவும், அடிலெய்ட் ஆட்டத்தை இந்தியாவும் வென்றன. இதனால் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 
முதல் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வென்ற நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அபாரமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 
2 மாதங்கள் பரபரப்பான ஆஸி.சுற்றுப்பயணம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் இல்லாமையால் ஆஸி. அணி பலம் கணிசமாக குறைந்துள்ளது. இதன் தாக்கம் டெஸ்ட் தொடரில் வெளிப்பட்டது.
முதல் ஒருநாள் தொடர் வெற்றி: இதுவரை இந்திய அணி ஆஸி. மண்ணில் இரு தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை. கடந்த 1985-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டி, 2008-இல் சிபி முத்தரப்பு தொடரில் மட்டுமே வென்றது. கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 1-4 என ஆஸி.யிடம் இழந்தது இந்தியா.
5-ஆவது பெளலர் சிக்கல்: இதற்கிடையே மெல்போர்னில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் வெல்லும் நோக்கில் உள்ளது இந்திய அணி. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சரியான நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டை வீழ்த்துகின்றனர்.
ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இல்லாததால், 5-ஆவது பெளலராக யாரை பயன்படுத்துவது என்பதில் அணி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் 2 ஆட்டங்களிலும் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். 
அதே நேரத்தில் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், சுழற்பந்து வீச்சாளர் சஹால் ஆகியோருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் விஜய் சங்கருக்கு 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு திறனுள்ளதா என சந்தேகம் உள்ளது. கடைசி கட்டத்தில் பந்துவீச சிராஜும் திணறினார். சஹால் எளிதாக பந்துவீசுவார் எனக்கருதப்படுகிறது. 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்களோடு ஆடவும் வாய்ப்புள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை எந்த மாறுதலும் செய்யப்படாது. 
விஜய் சங்கர் களமிறங்கினால், பேட்டிங்கில் மாறுதல் ஏற்படும். கேதர் ஜாதவும் களமிறங்க்கூடும். அப்போது 5-ஆவது பெளலருக்கான 10 ஓவர்கள் இருவருக்கும் பிரித்து தரப்படும். 
இதனால் தினேஷ் கார்த்திக்-அம்பதி ராயுடுவின் இடங்களுக்கு ஆபத்து உள்ளது. வியாழக்கிழமை ராயுடு, தோனி, சங்கர், சஹால், ஜாதவ், தோனி, தவன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய தோனி: முதல் இரண்டுஆட்டங்களிலும் அரை சதம் அடித்ததின் மூலம் தோனி மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார். இது நிம்மதியை தந்துள்ளது. 
தொடக்க வீரர்கள் தவன்-ரோஹித், விராட் கோலி, மிடில் ஆர்டரில் ராயுடு, ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஆஸி. அணிக்கு நெருக்கடி:ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நீக்கப்பட்டு விட்டார். அவருக்கு பதிலாக ஆடம் ஸம்பா சேர்க்கப்பட்டார். மேலும் காயமுற்ற பெஹ்ரன்டர்ப்புக்கு பதில் பில்லி ஸ்டேன்லேக் இணைகிறார். 
தொடக்க வரிசை வீரர்கள் அலெக்ஸ் கரே-கேப்டன் பின்ச் ஆகியோர் ரன்களை குவிக்காமல் விரைவில் அவுட்டாவது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர் என இரட்டை தொடர்களை கைப்பற்றுமா இந்தியா என வெள்ளிக்கிழமை தெரிந்து விடும்.

3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: ஆஸி. அணியில் இரண்டு மாறுதல்கள்
மெல்போர்ன், ஜன. 17: இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடக்கவுள்ள மூன்றாம் ஒருநாள் ஆட்டத்துக்கான ஆஸி. அணியில் நாதன்லயன் நீக்கப்பட்டுள்ளார். பெஹ்ரண்டர் காயம் அடைந்துள்ள நிலையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லயனுக்கு பதில் ஆடம்ஸம்பாவும், பில்லி ஸ்டேன்லேக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். மெல்போர்ன் ரினேகேட்ஸ் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்டஸனும் சேர்க்கப்பட்டுள்ளார். 
அணி விவரம்-ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஆடம் ஸ்ம்பா, பில்லி ஸ்டேன்லேக்,

3-ஆவது ஆட்டம்: மெல்போர்ன், நேரம்: காலை 7.50 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com