நிறைவடைகிறது ஆன்டி முர்ரேயின் சகாப்தம்

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேயின் (பிரிட்டன்) சகாப்தம், ஆஸி. ஓபன் போட்டியில் பெற்ற முதல் சுற்று தோல்வியுடன் நிறைவடைகிறதா என டென்னிஸ் ரசிகர்கள்
நிறைவடைகிறது ஆன்டி முர்ரேயின் சகாப்தம்


உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேயின் (பிரிட்டன்) சகாப்தம், ஆஸி. ஓபன் போட்டியில் பெற்ற முதல் சுற்று தோல்வியுடன் நிறைவடைகிறதா என டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2006 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் பெடரர், ஜோகோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர் பிக் ஃபோர் என அழைக்கப்படுகின்றனர். இந்த நால்வரும் இக்காலகட்டத்தில் ஏதாவது ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்றவர்களாகவும், உலகின் நம்பர் ஒன் வீரர்களாகவும் திகழ்கின்றனர். ஆடவர் டென்னிஸ் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே மாறி மாறி வைத்திருந்த பெருமைக்கு உரியவர்கள். பிரிட்டனின் ஸ்காட்லாந்து பகுதி கிளாஸ்கோ நகரில் கடந்த 1987 மே 15-இல் பிறந்தவர் ஆன்டி முர்ரே. 3 வயது முதலே டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு ஆடிய முர்ரே தனது எட்டாவது வயதில் மத்திய மாவட்ட டென்னிஸ் லீக் போட்டியில் பங்கேற்றார். அவரது சகோதரர் ஜேமி முர்ரேயும் டென்னிஸ் ஆட்டத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னாளில் இரட்டையர் போட்டியில் பல முறை கிரண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய முர்ரே சகோதரர்கள்: டன்பிளேன் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, முர்ரே சகோதரர்கள் இருவரும் 1996-இல் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
தொடர்ந்து ஸ்பெயினில் பயிற்சி பெற்ற அவர் 2005-இல் தொழில்முறை டென்னிஸ் வீரராக மாறினார். அக்காலகட்டத்தில் ரோஜர் பெடரர்-ரபேல் நடால் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அப்போது ஆன்டி முர்ரேயின் தரவரிசை 407 ஆகும். பின்னர் 2006 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டனின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை பெற்றார் . அதைத் தொடர்ந்து முதல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார் முர்ரே.
பெடரரை வீழ்த்தினார்: அதே ஆண்டு சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் முனனணி வீரர் பெடரரை வீழ்த்தி களிமண்தரையில் அவர் பெற்று வந்த 55 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிரெஞ்சு ஓபன் போட்டியின் போதே இடுப்பில் காயமடைந்த அவர், எலும்புகள் முழு வளர்ச்சி பெறாததால், தனக்கு வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே 2007-இல் உலகின் முதல் 10 வீரர்கள் பட்டியலில் நுழைந்தார் முர்ரே. பின்னர் 2008-இல் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் போட்டி இறுதிக்கு முதன்முறையாக தகுதி பெற்று பெடரரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார்.
2009-இல் உலகின் நம்பர் 2 அந்தஸ்து: 2009-இல் 2 மாஸ்டர்ஸ் பட்டங்களை வென்று உலகின் இரண்டாம் நிலை வீரர் அந்தஸ்துக்கு முன்னேறினார். 
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்:2012-ல் யுஎஸ் ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் முர்ரே. அதைத்தொடர்ந்து 2013-இல் முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டவென்று,, 77 ஆண்டுகளில் இப்பட்டத்தை வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். அப்போது இடுப்பு காயத்துக்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். 2012- லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றார்.
உலகின் நம்பர் ஒன் வீரர்: 2015-இல் பிரிட்டன் அணிக்கு டேவிஸ் கோப்பை பெறறுத் தந்தார். அதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டுக்கு அவருக்கு பொற்கால ஆண்டாக அமைந்தது. அதில் இரண்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம், ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது தங்கத்தை வென்ற நிலையில் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தையும் பெற்றார். ஆஸ்திரேலிய ஓபனில் அதிகமுறை 5 முறையும், பிரெஞ்சு ஓபனில் 1 முறையும் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். 2017-இல் தொடர் காயம் காரணமாக தனது முதல்நிலை அந்தஸ்தை இழந்தார்.
இடுப்பு காயத்தால் சோதனையான ஆண்டு: 2018 ஆண்டு தொடக்கமே அவருக்கு சோதனையாக அமைந்து விட்டது. இடுப்பு காயத்தால் பல்வேறு முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் ஆஸி. ஓபன் போட்டிக்கு பின் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானிப்பேன் என அறிவித்தார். ஆஸி. ஓபன் முதல் சுற்று போட்டியில் 4 மணி நேரம் நடைபெற்ற கடும் போராட்டத்துக்கு பின் தான் முர்ரே தோல்வியுற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உலக டென்னிஸ் வட்டாரத்தில் கோலோச்சி வந்த முர்ரேயின் சகாப்தம் நிறைவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com