இரட்டை தொடர் வெற்றி: வரலாறு படைத்தது இந்தியா

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தலா 2-1 என  டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி  அபார சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி
இரட்டை தொடர் வெற்றி: வரலாறு படைத்தது இந்தியா

3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்  வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தலா 2-1 என  டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி  அபார சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி மற்றும் 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது.
ஏற்கெனவே இந்தியா-ஆஸி. அணிகள் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரை 71 ஆண்டுக்கால காத்திருப்புக்கு பின்  இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இதில் . சிட்னியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், அடிலெய்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இதனால் 1-1 என தொடர் சமநிலை ஏற்பட்டது. இதற்கிடையே இந்திய அணியின் ஆஸி.சுற்றுப்பயணம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.  
முதல் ஒருநாள் தொடர் வெற்றி: இதுவரை இந்திய அணி ஆஸி. மண்ணில் இரு தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை. கடந்த 1985-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டி, 2008-இல் சிபி முத்தரப்பு தொடரில் மட்டுமே வென்றது. கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 1-4 என ஆஸி.யிடம் இழந்தது இந்தியா.
புவனேஸ்வர் அபாரம்: இந்நிலையில் வெள்ளிக்கிழமை மூன்றாம் ஒரு நாள் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆஸி. தரப்பில் அலெக்ஸ் கரே, கேப்டன் ஆரோன் பின்ச் களமிறங்கினர். வழக்கம் போல் தொடக்க வரிசை சரிவை சந்தித்தது. புவனேஸ்வர் பந்துவீச்சில் அலெக்ஸ் கரே 5 ரன்களுடனும், பின்ச் 14 ரன்களுடனும் அவுட்டாயினர். புவனேஸ்வர் குமாரின் அற்புத பந்துவீச்சால் தொடக்க வீரர்கள் வெளியேறினர்.
சஹல் சுழலில் வீழ்ந்த ஆஸி.:  பின்னர் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகியோர் ஒரளவு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் அவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர் சஹாலால் பிரச்னை ஏற்பட்டது. கவாஜா 34, ஷான் மார்ஷ் 39 ரன்களுக்கும் சஹல் பந்தில் அவுட்டாகினர். 
பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 58:
பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் மட்டுமே நிலைத்து ஆடினார். 2 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 58 ரன்களை குவித்த அவர் சஹல் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 10, மேக்ஸ்வெல் 26, ஜாய் ரிச்சர்ட்ஸன் 16, ஆடம் ஸம்பா 8, ஸ்டேன்லேக் 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.
பீட்டல் சிடில் மட்டுமே 10 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
சஹல் 6 விக்கெட்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் அபாரமாக பந்துவீசி 42 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2-28, ஷமி 2-47 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இறுதியில் ஆஸி. அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 230 ரன்களை மட்டுமே எடுத்தது.
தொடக்கம் சரிவு: 231 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய சார்பில் ஷிகர் தவன்-ரோஹித் சர்மா இணை களமிறங்கியது. ஆனால் தொடக்க வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. ரோஹித் 9 ரன்களுக்கு சிடில் பந்தில் அவுட்டானார். ஷிகர் தவனும் 23 ரன்களுக்கு ஸ்டாய்னிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
விராட் கோலி 46: பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி-தோனி இணை நிலைத்து ஆடி ரன்களை குவித்தது. 3 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 46 ரன்களை எடுத்த கோலி, ஜாய் ரிச்சர்ட்ஸன் பந்தில் அவுட்டானார். தோனியும்-கோலியும் சேர்ந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர். 
தோனி-ஜாதவ் வெற்றி கூட்டணி 121 ரன்கள் சேர்த்தனர்: பின்னர் இணைந்த தோனி-ஜாதவ் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். 6 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 87 ரன்களுடன் தோனியும், 7 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 61 ரன்களுடன் கேதர் ஜாதவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து 121 ரன்களை சேர்த்தனர்.
49.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 234 ரன்களுடன் அபார வெற்றி பெற்றது.
ஆஸி. அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.
ஆஸி. தரப்பில் ஜாய் ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் யுஜவேந்திர சஹல்
இத்தொடரில் தனது முதல் ஆட்டத்தில் ஆடிய சஹல் வெறும் 42 ரன்களை விட்டுக்கொடுத்து அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். எந்த பந்துவீச்சாளரும் ஒரு நாள் ஆட்டத்தில் செய்யாத சாதனையை சஹல் செய்துள்ளார். 
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் இந்திய பந்துவீச்சாளர் அஜித் அகர்கரும் 42 ரன்களை தந்து 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை சஹல் தற்போது சமன் செய்துள்ளார்.

தொடர் நாயகன் எம்.எஸ். தோனி
தோனி இத்தொடரில் மூன்று அரை சதங்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றிக்கு வித்திட்டார். அவரது உடல்தகுதி குறித்து கேள்வி எழுந்த நிலையில் தோனி மிடில் ஆர்டரில் அற்புதமாக ஆடி தனது ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார். இதனால் தொடர் நாயகன் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அணியின் கூட்டு முயற்சியால் அபார வெற்றி: கோலி
அணியின் கூட்டு முயற்சியால் இந்த தொடர் வெற்றி சாத்தியமானது. டி 20 தொடரை சமன் செய்தோம், டெஸ்ட், ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளோம். அணியின் ஒட்டுமொத்த முயற்சியால் இது நடைபெற்றது. இதற்காக நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். மிகவும் பெருமையாக உள்ளது.

முதலில் இந்த விக்கெட்டை நினைத்து சிறிது திகிலாக தான் இருந்தது. எனினும் பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். குல்தீப்புக்கு ஓய்வு தரப்பட்டது. சஹலை பயன்படுத்தினோம். அவர் 6 விக்கெட்டை சாய்த்தார்.
கேதர் ஜாதவும், அபாரமாக பந்துவீசி, பேட்டிங்கும் செய்தார். சிறந்த பேட்டிங் இணை அமைந்தது. தற்போது உலகக் கோப்பையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். தொடர்ந்து நியூஸிலாந்திலும், பின்னர் இந்தியாவிலும் சில போட்டிகள் நடக்கின்றன என்றார்.

பொறுமையை தவற விட்டோம்: ஆரோன் பின்ச்
சில சிறந்த வீரர்களுக்கு ஆட வாய்ப்பு அளித்தால் அது எல்லோரையும் பாதிக்கிறது. பந்துவீச்சாளர்கள் சில நல்ல வாய்ப்புகளை தவற விட்டனர். முதலிரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் எங்கள் பேட்டிங் நன்றாகவே இருந்தது. ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் பொறுமையை இழந்து விட்டோம். விக்கெட்டின் தன்மையை மீறி அதிக ஸ்கோரை குவிக்க ஆசைப்பட்டோம். இதுபோன்ற பிட்ச்களில் மேலும் குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்க வேண்டும் என்றார்.

எந்த பேட்டிங் நிலையிலும் ஆடத் தயார்: தோனி
தொடர் நாயகன் தோனி கூறியதாவது: இந்த பிட்ச் மிகவும் மெதுவாக செயல்பட்டது. இதனால் பந்தை விளாசுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் ஆஸி. பெளலர்கள் தங்கள் கோட்டாவை நிறைவு செய்ய இருந்தனர். இதனால் கடைசி வரை ஆட்டத்தை இழுக்க நேரிட்டது. நன்றாக பந்துவீசுவோர் பின்னால் நாம் செல்லக்கூடாது. கேதர் ஜாதவ் தனது பணியை செம்மையாக செய்து அற்புதமான பவுண்டரிகளை அடித்தார். எந்த நிலையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது கிடையாது. எந்த பேட்டிங் நிலையிலும் நான்ஆடத் தயார். 14 ஆண்டுகளாக ஆடி வரும் நான் 6-ஆம் நிலையில் ஆட மாட்டேன், 4-ஆம் வரிசையில் தான் ஆடுவேன் என கூற முடியாது என்றார்.

மகிழ்ச்சியாக இருந்தது: சஹல்
முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் பந்துவீசுவது மகிழ்ச்சியாக இருந்தது. பந்து சிறிதளவு தான் சுழன்றது. இதனால் பந்தை மெதுவாக வீசி, வேகத்தையும் மாறி மாறி வீசினேன். அடுத்த நியூஸிலாந்து தொடரையும் எதிர்பார்த்துள்ளேன்.


ரொக்கப் பரிசு ஏன் வழங்கவில்லை: காவஸ்கர் கேள்வி?
ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசை வழங்கவில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை இந்திய முன்னாள் கேப்டன் காவஸ்கர் சாடியுள்ளார். ஆட்ட நாயகன் சஹல், தொடர் நாயகன் தோனிக்கு 500 டாலர்கள் பரிசளிக்கப்பட்டது. அதை அவர்கள் நலநிதிக்கு அளித்து விட்டனர். அணிக்கு வெற்றிக் கோப்பை மட்டுமே முன்னாள் வீரர் கில்கிறிஸ்டால் வழங்கப்பட்டது. போட்டியை நடத்தியவர்கள் ஒளிபரப்பு மூலம் ஏராளமான வருவாயை ஈட்டியுள்ளனர். ஆனால் வெற்றி பெற்ற அணிக்கு வெறும் கோப்பை மட்டுமே தருகின்றனர். ஏன் வீரர்களுக்கு சிறந்த ரொக்கப்பரிசு
 தரக்கூடாது. வீரர்களால் தான் போட்டி அமைப்பாளர்களுக்கு இவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை நினைக்க வேண்டும் என சாடியுள்ளார்.

குவியும் பாராட்டுகள்...
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரட்டை தொடர்களை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது.

சச்சின் டெண்டுல்கர்: 
இந்த வெற்றி அணியின் உறுதியான செயல்பாட்டுக்கு கிடைத்ததாகும் சிறப்பான கிரிக்கெட்டை ஆடினர் நமது வீரர்கள். வாய்ப்பு கிடைத்த போது அதை கேதர் ஜாதவ் சரியாக பயன்படுத்தியது மகிழ்ச்சி தருகிறது. எம்.எஸ். தோனி மீண்டும் நங்கூரம் போல் செயல்பட்டார்.

விரேந்தர் சேவாக்: 
ஓம் பினிஷாயா நம, டெஸ்ட், ஒரு நாள் தொடர் வெற்றிகள். 

ஹர்பஜன் சிங்: 
அணி வீரர்களுக்கு பாராட்டுகள். சிறந்த ஆட்டமாக அமைந்தது. எம்.எஸ்.தோனி மீண்டும் பார்மில் உள்ளது பெரிய பலம். கேதர் ஜாதவுக்கு சபாஷ். 

விவிஎஸ். லஷ்மண்: 
தோனி-கேதர் ஜாதவ் இருவரும் முக்கியமான பங்காற்றியுள்ளனர். இரட்டை வெற்றி பெருமையாக உள்ளது. இந்த ஆஸி. பயணம் நமக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
முகமது கைஃப் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com