தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: இறுதிச் சுற்றில் தமிழகம்-மத்திய தலைமைச் செயலக அணிகள் மோதல்

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதிச் சுற்றில் தமிழக அணியும், மத்திய தலைமைச் செயலக அணிகளும் மோதுகின்றன.

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதிச் சுற்றில் தமிழக அணியும், மத்திய தலைமைச் செயலக அணிகளும் மோதுகின்றன.
அரையிறுதியில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை காலை முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழகம்-சாய் அணிகள் மோதின. 
இளம் வீரர்களைக் கொண்ட சாயும், அனுபவ வீரர்களுடன் தமிழக அணியும் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. சாய் வீரர் பாபி சிங் 9-ஆவது நிமிடத்தில் முதல் கோலடித்தார். 13-ஆவது நிமிடத்தில் தமிழக வீரர் சண்முகம் கோலடித்து சமன் செய்தார். அடுத்த சிறிது நேரத்தில் பெனால்டி கார்னர் மூலம் வினோதன் கோலடித்தார். பதிலுக்கு சாய் அணி வீரர் மொகித் குமாரும் கோலடித்ததால் முதல்பாதி 2-2 என சமனில் முடிந்தது.
இரண்டாம் பாதியில் 40-ஆவது நிமிடத்தில் தமிழக வீரர் ராயர் 3-ஆவது கோலடித்தார். பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் சாய் வீரர் ராகுல்குமார் கோலடித்ததால் 3-3 என சமநிலை ஏற்பட்டது. 
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் 3-2 என தமிழக அணி முன்னிலை பெற்றது. 6-5 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட்டில் தமிழகத் தரப்பில் செந்தில்நாயகம், மணிகண்டன், எஸ். மணிகண்டனும், சாய் தரப்பில் விஷால், லோகேஷ் போரா ஆகியோர் கோலடித்தனர்.
மாலையில் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதியில் மத்திய தலைமைச் செயலக அணியும், பெங்களூரு அணியும் மோதின. இதிலும் ஆட்ட நேர முடிவில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-3 என கோல்கள் அடிக்கப்பட்டன. இறுதியில் 7-6 என்ற கோல் கணக்கில் வென்று மத்திய தலைமைச் செயலக அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தமிழகமும்-மத்திய தலைமைச் செயலக அணியும் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com