லசித் மலிங்கா மனைவியுடன் மோதும் திசாரா பெரேரா: இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு!

கேப்டனின் மனைவி என்னைக் குறை கூறும்போது மற்றவர்களும் என்னை விமரிசனம் செய்வார்கள்... 
லசித் மலிங்கா மனைவியுடன் மோதும் திசாரா பெரேரா: இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு!

இலங்கை அணி கேப்டன் மலிங்காவின் மனைவி தன்னை விமரிசனம் செய்ததால் இலங்கை அணியினரின் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாகிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்காவின் மனைவி தன்யா பெரேரா, இலங்கை அணி ஆல்ரவுண்டர் திசாரா பெரேராவை விமரிசித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார். இலங்கையின் புதிய விளையாட்டு அமைச்சரைச் சந்தித்து, அணியில் தனக்கான இடத்தை பெரேரா உறுதி செய்துள்ளார் என தன்யா விமரிசித்திருந்தார். இதற்கு, 2018-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் சிறப்பாக விளையாடியதாக திசாரா பெரேரா பதில் அளித்தார். ஆனால் மீண்டும் பெரேராவை விமரிசித்து தன்யா பதிவு எழுதியதால் உடனடியாக இப்பிரச்னையை இலங்கை கிரிக்கெட் சங்கத்திடம் கொண்டுசென்றுள்ளார் திசாரா பெரேரா. 

அணியின் கேப்டனின் மனை என்னைக் குறை கூறும்போது மற்றவர்களும் என்னை விமரிசனம் செய்வார்கள். அந்த ஃபேஸ்புக் பதிவு வெளியானது முதல் இலங்கை அணி வீரர்களிடையே ஒரு அசெளகரியம் நிலவுகிறது. இரு மூத்த வீரர்கள் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருக்கும்போது இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. விரிசல் கொண்ட அணியாகக் களமிறங்கமுடியாது. சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட உலகக்கோப்பையின் மீதே நம் கவனம் இருக்கவேண்டும். அணியில் ஒற்றுமை நிலவுவதே முக்கியமானது. ஒரு நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் இலங்கை கிரிக்கெட் அணியின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாகியுள்ளன. எனவே இலங்கை கிரிக்கெட் சங்கம் இதில் தலையிட்டுப் பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சங்க தலைமைச் செயல் நிர்வாகி ஆஷ்லே டீ சில்வாவுக்கு பெரேரா கடிதம் எழுதியுள்ளார். 

நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டார். 2017-ல் இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com