தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித்!

கிரிக்கெட் உலகம் நன்கு அறிந்து வியந்துவரும் இந்திய வீரர் ரோஹித் சர்மா (31). ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்.
தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித்!



கிரிக்கெட் உலகம் நன்கு அறிந்து வியந்துவரும் இந்திய வீரர் ரோஹித் சர்மா (31). ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன். 
20 வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த ரோஹித், அடுத்த 10 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனை அபாரமானது. பல ஜாம்பவான்களின் சாதனைகளை சமன் செய்ததுடன், யாரும் எட்டாத சாதனைகளையும் இவர் படைத்துள்ளார்.
2007ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின், ஷேவாக் ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர், சிறந்த தொடக்க ஆட்டக்காரராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 2013இல் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்திலேயே ரோஹித் சதம் அடித்து திரும்பிப் பார்க்க வைத்தார்.
டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன்பு 108 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியவர் ரோஹித். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் தனி ஒரு வீரராக 264 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
50 ஓவர் ஆட்டங்களில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் அதுதான். 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் பதிவு செய்த ரோஹித், டி20, ஒரு நாள், டெஸ்ட் ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் ஆட்டத்திலும் சதம் பதிவு செய்த வீரர்களின் வரிசையில் இணைந்தார்.
வேகமாக சாதனை: நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
அதேநேரம், ரோஹித் இந்தத் தொடரில் இரண்டு சாதனைகளை சத்தமில்லாமல் பதிவு செய்துள்ளார். மூன்றாவது ஆட்டத்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.  இதன்மூலம், முதல் தர (லிஸ்ட் ஏ) கிரிக்கெட்டில் 10,000 ரன்களை வேகமாகக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தனது 260ஆவது இன்னிங்ஸில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி (219 இன்னிங்ஸ்), சௌரவ் கங்குலி (252), சச்சின் டெண்டுல்கர் (257) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
தோனியின் சாதனை சமன்: நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய ரோஹித், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 96 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 77 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். 
3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 23.4ஆவது ஓவரில் ரோஹித் இரண்டாவது சிக்ஸரை பறக்கவிட்டபோது, ஒரு நாள் ஆட்டத்தில் தோனியின் சாதனையை சமன் செய்தார்.
337 ஒரு நாள் ஆட்டங்களில் 222 சிக்ஸர்களை தோனி பதிவு செய்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் ஆசிய லெவன் அணிக்காக விளையாடியபோது பதிவு செய்ததாகும். எனவே, அதை விடுத்து இந்திய அணிக்காக ஒரு நாள் ஆட்டத்தில் அவர் பதிவு செய்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 215. இந்தச் சாதனையை 199 ஒரு நாள் ஆட்டங்களிலேயே எட்டிவிட்டார் ரோஹித்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி (398 ஒரு நாள் ஆட்டங்களில் 351 சிக்ஸர்) , மே.இ.தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் (284 ஆட்டங்களில் 275 சிக்ஸர்), இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா (445 ஆட்டங்களில் 270சிக்ஸர்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அடுத்த இடங்களில் தோனியும், ரோஹித்தும் உள்ளனர்.
4ஆவது இரட்டை சதம் சாத்தியமா?: 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் தோனி விளையாடவில்லை. 4ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் ரோஹித் சிக்ஸர்களை பறக்கவிட்டால் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
மேலும், டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தோனியின் (520 ஆட்டங்களில் 347 சிக்ஸர்) சாதனையையும், 3 சிக்ஸர்கள் அடித்தால் ரோஹித்தால் (316 ஆட்டங்களில் 345 சிக்ஸர்கள்) முறியடிக்க முடியும். நியூஸிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ரோஹித்துக்கு 200ஆவது ஒரு நாள் ஆட்டமாகும். ஏற்கெனவே, ஒரு நாள் போட்டிகளில் 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ரோஹித், 200ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் பதிவு செய்து பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com