டாஸ் எங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது
By DIN | Published On : 01st July 2019 01:42 AM | Last Updated : 01st July 2019 01:42 AM | அ+அ அ- |

இயான் மோர்கன் (இங்கிலாந்து கேப்டன்): இந்தியாவுக்கு எதிரான வெற்றியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது என கேப்டன் மோர்கன் கூறியுள்ளார். இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தடை போட்ட து இங்கிலாந்து. அதன் கேப்டன் மோர்கன் கூறியதாவது:
எங்கள் அணி தொடக்கமே சிறப்பாக அமைந்தது. எனினும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சிறந்த முடிவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பின்னர் அதுவே சிறந்ததாக மாறியது. ஜேஸன் ராய் மீண்டும் இணைந்தது, பேர்ஸ்டோவின் அதிரடி ஆட்டம் வலுவான அடித்தளத்தை தந்தது.
10 முதல் 20 ஓவர்களில் 95 ரன்களை வரை எடுத்தது தேவைக்கு அதிகமாகவே அமைந்தது. இந்தியாவின் இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்களை நாங்கள் எளிதாக கையாண்டோம்.
மெதுவான பந்துகளை கணித்து ஆட வேண்டியிருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் பிளங்கட், கிறிஸ்வோக்ஸ் மிகவும் அற்புதமாக பந்துவீசினர். மிடில் ஓவர்களில் பிளங்கட்டின் பங்கு முக்கியமானதாக திகழ்ந்தது. இந்த உலகக் கோப்பையில் எந்த ஆட்டமும் எளிதாக இல்லை என்றார் மோர்கன்.
விராட் கோலி (இந்திய கேப்டன்): அனைத்து அணிகளும் ஒன்று அல்லது இரண்டு தோல்விகளை இங்கு பெற்றுள்ளன. எதிரணி சிறப்பாக ஆடியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் செயல்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினர். நாங்கள் சிறப்பான ஆட்டத்தை தான் ஆடினோம்.
எங்கள் மனவலிமை அதிகமாகவே உள்ளது. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, தோல்விகளில் இருந்து அனுபவத்தை கற்க வேண்டும். டாஸ் என்பது முக்கியமானதாகும்.
தட்டையான இதுபோன்ற பிட்சில் பவுண்டரிகளாக விளாசப்பட்டன. இதுபோன்ற அனுபவத்தை முதன்முறையாக நாம் பெற்றோம். தட்டையான மெதுவான பிட்சால், நமது அணியின் பேட்டிங் சோபிக்கவில்லை.
இன்னும் சிறிது துணிந்து ஆடியிருந்தால், வெற்றியை நெருங்கி இருக்கலாம். இங்கிலாந்தின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது என்றார் கோலி.