ஓய்வுபெற்றார் அம்பட்டி ராயுடு

 இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பட்டி ராயுடு (33), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். 
ஓய்வுபெற்றார் அம்பட்டி ராயுடு


 இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பட்டி ராயுடு (33), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். 
நடப்பு உலகக் கோப்பை போட்டியின் இந்திய அணியில் தனக்கான வாய்ப்பு இருமுறை மறுக்கப்பட்டதை அடுத்து, ராயுடு இந்த முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்தியாவுக்காக இதுவரை...
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் மூலம், இந்திய அணியில் இடம்பிடித்த ராயுடு, இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 1,694 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 47.05 ஆகும். 
ராயுடு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. 50 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கடந்த ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தார். 

தடை...
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சக வீரர்களுடனும், போட்டி அதிகாரிகளுடனும் முரண்படும் போக்கை கடைப்பிடித்தார் ராயுடு. சற்று ஆத்திரக்காரராக அறியப்பட்ட அவர், கடந்த 
ஆண்டு சையது முஷ்டாக் அலி போட்டியின்போது கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்காக 2 ஆட்டங்களில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. 

ஓய்வு முடிவு தொடர்பாக பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் ராயுடு கூறியுள்ளதாவது
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறும் முடிவுக்கு வந்துவிட்டேன். 
இந்தத் தருணத்தில் பிசிசிஐ-க்கும், ஹைதராபாத், பரோடா, ஆந்திரம், விதர்பா என, நான் விளையாடிய அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் எனது நன்றிகளை 
தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டுக்காக விளையாடியதை கெளரவமாகக் கருதுகிறேன். தோனி, ரோஹித், கோலி போன்ற கேப்டன்களுக்கு எனது நன்றிகள். குறிப்பாக இந்திய அணியில் இருந்தபோது விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். கடந்த 25 ஆண்டுகளாக  பல நிலைகளில்  இந்த விளையாட்டின் மூலம் எனது வாழ்க்கைப் பயணம் அருமையானதாக இருந்தது. பல்வேறு ஏற்ற-இறக்கங்களை அதில் கற்றுக்கொண்டேன். 

ஐபிஎல் போட்டியில்...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார் ராயுடு. கடந்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். 
கடந்த 2018-ஆம் ஆண்டு சீசனில் மட்டும் ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 602 ரன்கள் குவித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஒரு அரைசதத்துடன் 282 ரன்கள் சேர்த்திருந்தார்.

உலகக் கோப்பை சர்ச்சை...
பேட்டிங் வரிசையில் 4-ஆவது வீரராக களமிறக்கப்பட பொருத்தமான நபர் ராயுடு என சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் கோலி அறிவித்திருந்தார். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தயார் நிலை வீரர்கள் பட்டியலில் ராயுடுவின் பெயரும் இருந்தது. 
எனினும், அந்தப் போட்டியில் ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலக, அந்த இடத்துக்கு மயங்க் அகர்வால் கொண்டு வரப்பட்டார். இவ்வாறு தனக்கான வாய்ப்பு இருமுறை நிராகரிக்கப்பட்டதன் அதிருப்தியால் ராயுடு ஓய்வு முடிவை அறிவித்ததாகத் தெரிகிறது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் ராயுடு. ஆனால் ஆடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. 

அதிருப்தியின் வெளிப்பாடு...
பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட 3 திறமைகளின் காரணமாகவே இந்திய அணியில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், அவரது திறமையை முப்பரிமாண அடிப்படையிலானது என்று குறிப்பிட்டார். 
அதை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராயுடு, உலகக் கோப்பை போட்டியை காண்பதற்காக முப்பரிமாண கண்ணாடிகள் வாங்கவுள்ளேன் என்று கூறியிருந்தார்.

வருத்தமான நாள்
ராயுடுவின் ஓய்வு முடிவுக்கு, தேர்வுக் குழுவினரே காரணம். அந்தக் குழுவில் உள்ள 5 நபர்களின் ரன்களை சேர்த்தால் கூட, ராயுடு இதுவரை அடித்த ரன்களுக்கு ஈடாகாது. உலகக் கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ராயுடு இடத்தில் எந்த வீரர் இருந்தாலும் இதே மனநிலை தான் இருந்திருக்கும். அவரைப் போன்ற ஒரு நல்ல வீரர் 
இவ்வாறு ஓய்வு பெறுவது இந்திய கிரிக்கெட்டுக்கு வருத்தமான நாள்.

வலி தரக்கூடியது
உலகக் கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒரு விஷயம் தான். ஓய்வுபெறும் ராயுடுவின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.
ராயுடு ஓய்வு முடிவு தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்ட கோலி, நீங்கள் சிறந்த நபர் ராயுடு. எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com