இந்தியாவின் கோப்பைக் கனவு கலைந்தது: இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா,
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணியினர். 
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணியினர். 

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. நியூஸிலாந்து தொடர்ந்து 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. 
மான்செஸ்டர் நகரில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. 
இந்திய அணியின் தொடக்க பேட்டிங் வரிசை சோபிக்காமல் போக, மிடில் ஆர்டரும் சொற்ப ரன்கள் எடுக்க, தோனிஜடேஜா கூட்டணி மட்டும் கடுமையாக முயற்சித்து ரன்கள் சேர்த்தபோதும் வெற்றி வாய்ப்பை எட்ட இயலவில்லை. ஜடேஜா 77, தோனி 50 ரன்கள் அடித்து வீழ்ந்தனர். நியூஸிலாந்து தரப்பில் மாட் ஹென்றி (3/37), டிரென்ட் போல்ட் (2/42) தங்களது பந்துவீச்சால் இந்தியாவின் தோல்விக்கு அடித்தளமிட்டனர். மாட் ஹென்றி ஆட்டநாயகன் ஆனார். 
முன்னதாக, செவ்வாய்க்கிழமை டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் தடைப்பட்ட ஆட்டம், புதன்கிழமை மீண்டும் தொடர்ந்தது. 
ராஸ் டெய்லர் 67, டாம் லதாம் 3 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். இதில் டெய்லர் கூடுதலாக 7 ரன்களே சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே டாம் லதாமும் 10 ரன்களுக்கு நடையைக் கட்டினார். கடைசி விக்கெட்டாக மாட் ஹென்றி 1 ரன்னுக்கு வீழ்ந்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எட்டியது நியூஸிலாந்து. சேன்ட்னர் 9, போல்ட் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் 3 விக்கெட்டுகள் சாய்திருக்க, பும்ரா, பாண்டியா, ஜடேஜா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 
தொடக்கமே தடுமாற்றம்: இதையடுத்து 240 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 2, 3, 4ஆவது ஓவர்களுக்கு வரிசையாக தலா ஒரு விக்கெட் வீழ்ந்தது. முறையே, ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 
தொடக்க வீரர்கள் சரிவால் 4 ஓவர்களில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது இந்தியா. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ஏமாற்றமளித்து வெளியேற, ரிஷப் பந்த்தோனி கூட்டணி விக்கெட் சரிவுக்கு சற்று அணைபோட்டது. 
எனினும் ரன்கள் மிகச் சொற்பமாகவே கூடியது. இந்நிலையில் 4 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ரிஷப் பந்த் வெளியேறினார். அடுத்து வந்த பாண்டியா, தோனியுடன் இணைந்தார். 
இந்தக் கூட்டணியும் நிதானமாகவே ஆட 32.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. பாண்டியாவும் 2 பவுண்டரிகள் உள்பட 32 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 
ஜடேஜா அபாரம்: ஏறத்தாழ இந்தியா தோல்வியை நெருங்கிவிட்ட நிலையில், தோனியுடன் இணைந்த ஜடேஜா அதிரடி காட்டினார். பந்தை பவுண்டரி, சிக்ஸர்களாக அவர் பறக்கவிட அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 
அரைசதம் கடந்த ஜடேஜா பந்துகளுக்கும், ரன்களுக்கும் இருந்த வித்தியாசத்தை நன்றாகக் குறைத்தார். இந்தியாவின் வெற்றிக்கான நம்பிக்கை துளிர்த்த நிலையில், ஜடேஜா ஆட்டமிழந்தார். 
4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்திருந்தார் அவர். நீண்ட நேரம் நிலைத்திருந்த தோனியும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 50 ரன்களுக்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது. ஜடேஜாதோனி கூட்டணி 7ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்திருந்தது. 
பின்னர் புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல் ஆகியோர் கடைசி இரண்டு ஓவர்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. 
நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 3, போல்ட், சேன்ட்னர் தலா 2, ஃபெர்குசன், நீஷம் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஏமாற்றமளிக்கும் முடிவு...
உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்துடன் இந்தியா வெளியேறியது குறித்து தனது சுட்டுரையில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "ஏமாற்றமளிக்கும் முடிவு; எனினும், இந்தியா அணி இறுதி வரை முயன்றது. உலகக் கோப்பை போட்டி முழுவதுமாகவே இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாகச் செயல்பட்டது. அதற்காக பெருமை கொள்கிறோம். வெற்றி-தோல்வி வாழ்வின் அங்கம். இந்திய அணியின் எதிர்கால போட்டிகளுக்காக வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

ஆடுகளம் குறித்து விமர்சனம்
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நடைபெற்ற ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தின் ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துள்ளனர். 
மார்க் வாக் (ஆஸ்திரேலியா): ஓல்ட் டிராஃபோர்ட் ஆடுகளம் நல்ல முறையில் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் மெதுவான ஆடுகளம் போல் தெரிகிறது. அது சமனில் இருப்பதாகத் தெரியவில்லை
பால் நியூமேன் (இங்கிலாந்து): ஓல்ட் டிராஃபோர்ட் ஆடுகளம் மிகவும் நல்லதொரு பிட்சாகும். ஆனால், உலகக் கோப்பை போட்டிக்கு உகந்த வகையில் அது இருப்பதாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி போட்டி நடைபெறும் நாடுகளில், அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு மைதானத்தை பராமரிக்கவே போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது' என்று கூறியுள்ளது.

காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தின்போது ரசிகர்கள் பகுதியில் இருவர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மான்செஸ்டர் நகரில் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது இருவர் அரசியல் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேனர்களை ஏந்தியிருந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனிநாடு ஏற்படுத்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினர். 
இதையடுத்து மைதானத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக அவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்ற போலீஸார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com