விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்
By DIN | Published On : 13th July 2019 08:06 PM | Last Updated : 13th July 2019 08:06 PM | அ+அ அ- |

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்று இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் மோதினர்.
இதில், சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இது இவரது முதல் விம்பிள்டன் பட்டம், இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம், விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முதல் ருமேனிய வீராங்கனை என்ற பெருமையை ஹாலெப் பெற்றார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்ய செரீனா வில்லியம்ஸ் மேலும் காத்திருக்க வேண்டியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப்பை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.