கிரிக்கெட் உலகின் புதிய சாம்பியன் யார்? இன்று உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் புதிய சாம்பியன் ஆகப் போவது இங்கிலாந்தா அல்லது நியூஸிலாந்தா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
கிரிக்கெட் உலகின் புதிய சாம்பியன் யார்? இன்று உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

இங்கிலாந்து-நியூஸி. மோதல்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் புதிய சாம்பியன் ஆகப் போவது இங்கிலாந்தா அல்லது நியூஸிலாந்தா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

12-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த மே மாதம் 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இதில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் உள்ளிட்டவை வெளியேறின.

பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா, இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா, மூன்றாவது இடம் பிடித்த இங்கிலாந்து, நான்காம் இடம் பிடித்த நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
பட்டம் வெல்லும் என கருதப்பட்ட நிலையில் முதலாவது அரையிறுதியில்

இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைச் செய்தது நியூஸிலாந்து. அதே போல் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.

ஆஸி. 5 முறை சாம்பியன்: மே,இ.தீவுகள், இந்தியா தலா 2 முறை, பாகிஸ்தான், இலங்கை தலா 1 முறை, ஆஸ்திரேலியா 5 முறை என உலகக் கோப்பையை வென்றுள்ளன. ஏற்கெனவே தொடர்ந்து மூன்று முறை கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியும் பெற்றுள்ளது ஆஸி.

கடைசியாக 2015-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டம் வென்றது ஆஸி. 

இங்கிலாந்து-நியூஸிலாந்து மோதல்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14 ஜூலை) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பலமான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் வென்ற உற்சாகத்துடன் இரு அணிகளும் மோதுவதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக அமையும் எனத் தெரிகிறது.

ஒருமுறை கூட பட்டம் வெல்லாத அணிகள்; குறிப்பிடத்தக்க அம்சமாக இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்தோ ஒருமுறை கூட உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது. 

இதனால் முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் இறுதி ஆட்டத்துக்கான பயணம்

இங்கிலாந்து

* முதல் ஆட்டம்-தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஓவல்)
* இரண்டாவது ஆட்டம்-பாகிஸ்தானிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (டிரென்ட்பிரிட்ஜ்)
* மூன்றாவது ஆட்டம்-வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (கார்டிப்)
* நான்காவது ஆட்டம்-மே,இ.தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (செளதாம்ப்டன்)
* ஐந்தாவது ஆட்டம்-ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (மான்செஸ்டர்)
* ஆறாவது ஆட்டம்-இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி லீட்ஸ்)
* ஏழாவது ஆட்டம்-ஆஸி.யிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (லண்டன்)
* எட்டாவது ஆட்டம்-இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (பர்மிங்ஹாம்)
* ஒன்பதாவது ஆட்டம்-நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (செஸ்டர் லி ஸ்ட்ரீட்).
* அரையிறுதி-ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
நியூஸிலாந்து
* முதல் ஆட்டம்-இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (கார்டிப்)
* இரண்டாவது ஆட்டம்-வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ஓவல்)
* மூன்றாவது ஆட்டம்-ஆப்கனை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (டாண்டன்)
* நான்காவது ஆட்டம்-இந்தியா-மழையால் ரத்து (டிரென்ட்பிரிட்ஜ்)
* ஐந்தாவது ஆட்டம்-தென்னாப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (பர்மிங்ஹாம்)
* ஆறாவது ஆட்டம்-மே,இ.தீவுகளை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (மான்செஸ்டர்)
* ஏழாவது ஆட்டம்-பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (பர்மிங்ஹாம்)
* எட்டாவது ஆட்டம்-ஆஸி.யிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (லார்ட்ஸ்)
* ஒன்பதாவது ஆட்டம்-இங்கிலாந்திடம் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (டர்ஹம்)
* அரையிறுதி-இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (மான்செஸ்டர்)

உலகக் கோப்பையில் இரு அணிகள் 

இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 முறையும், நியூஸிலாந்து 5 முறையும் வென்றுள்ளன. தற்போதைய உலகக் கோப்பையில் நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் லீக் ஆட்டத்தில் வென்றிருந்தது இங்கிலாந்து.
கடந்த 2015 உலகக் கோப்பை போட்டியில் வெலிங்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வெறும் 123 ரன்களில் சுருட்டிய நியூஸிலாந்து, வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு எனப்படும் இங்கிலாந்து அதிகபட்சமாக 5 முறை உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி உள்ளது.

1979, 1987, 1992 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தையே பெற்றிருந்தது இங்கிலாந்து. கடந்த 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்திடம் தோல்வியுற்று தொடக்க சுற்றோடு வெளியேறியது இங்கிலாந்து.

2019 உலகக் கோப்பை போட்டிக்கு ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்துடன் பட்டத்தை வெல்லும் அணியாக அறியப்பட்ட இங்கிலாந்து, ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் உற்சாகத்துடன் உள்ளது. 27 ஆண்டுகள் கழித்து தற்போது இறுதியில் நுழைந்துள்ளது.

பேட்டிங்: அதன் பிரதான பலமாக அமைந்துள்ளது பேட்டிங் வரிசையாகும். ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் என வலிமையான பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். கடைசி வரிசை வீரர்களான ஆதில் ரஷீத், மொயின் கான் போன்றவர்களும் தேவையான நேரத்தில் பேட்டிங் செய்கின்றனர்.

ஜேஸன் ராய்-பேர்ஸ்டோ இணை வலுவான தொடக்கத்தை தந்து வருவது கூடுதல் பலமாகும். மிடில் ஆர்டரில் ஜோ ரூட் (549 ரன்கள்) அபாரமாக ஆடி வருகிறார், எதிரணியின் பந்துவீச்சை முதல் 7 பேட்ஸ்மேன்கள் சிதறடிக்கும் திறன் பெற்றுள்ளனர். 

பந்துவீச்சு: உள்ளூர் மைதான சாதகமான சூழலுடன், இங்கிலாந்து அணியில் மார்க் உட் (17), ஆதில் ரஷீத் (11), பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் (19), லியம் பிளங்கட் (8), கிறிஸ் வோக்ஸ் (13) விக்கெட்டுகளுடன் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமையும் எனத் தெரிகிறது. தொடர்ந்து 7 ஆட்டங்களில் 350க்கு மேல் ரன்களை விளாசியது அந்த அணி.

நியூஸிலாந்து

அதே நேரத்தில் நியூஸிலாந்து அணியும் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற சிறப்புடன் திகழ்கிறது. மேலும் 6 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்ஸனையே பெரிதும் சார்ந்துள்ளது.
பேட்டிங்: தொடக்க வரிசை வீரர்கள் மார்டின் கப்டில், காலின் மன்றோ ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் சரிவர ஆடவில்லை. மூத்த வீரான ராஸ் டெய்லர் மட்டுமேஅணிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆடுகிறார்.

பந்து வீச்சு: இந்தியாவின் அற்புதமான தொடக்க பேட்டிங் வரிசையையே சரித்து விட்டது நியூஸிலாந்து. டிரென்ட் பெளல்ட், பெர்குஸன், சான்ட்னர், கிராண்ட் ஹோம், நீஷம், மேட் ஹென்றி ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். இங்கிலாந்துக்கு இந்த பந்துவீச்சு சற்று சோதனையைத் தரும் எனத் தெரிகிறது.

மைதானம்:

லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. 
கடந்த 1814-இல் இந்த மைதானம் திறக்கப்பட்டது. 
பார்வையாளர்கள் எண்ணிக்கை; 30,000.
ஏற்கெனவே 1975, 1979, 1983, 1999-இல் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடந்துள்ளது.
 

தெளிவான வானிலை:

லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமான அம்சம் நிலவும். ஞாயிற்றுக்கிழமை வானிலை தெளிவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com