44 ஆண்டு கனவு நனவானது: இங்கிலாந்துக்கு முதல் உலகக் கோப்பை

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை வென்றதின் மூலம் கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது.
44 ஆண்டு கனவு நனவானது: இங்கிலாந்துக்கு முதல் உலகக் கோப்பை


உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை வென்றதின் மூலம் கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது. முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 241/8 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்தும் 15 ரன்களை எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து அந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதின் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றியது.
12-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் ரவுண்ட் ராபின் முறையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.  இதில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் தொடக்க சுற்றோடு வெளியேறின. 
முதல் நான்கு இடங்களைப் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.  இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தும், ஆஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்தும் இறுதிச் சுற்றில் நுழைந்தன.
இரண்டு அணிகளும் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதால் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் களமிறங்கினர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஹென்றி நிக்கோல்ஸ் அரைசதம்: தொடக்க வரிசையில் ஹென்றி நிக்கோல்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி 55 ரன்களை சேர்த்தார். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 30 ரன்களை சேர்த்து ஓரே உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த கேப்டன் 578 ரன்கள் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார்.
டாம் லத்தம் மட்டுமே அடுத்து 47 ரன்களை விளாசினார். ஏனைய வீரர்கள் கப்டில் 19, ராஸ் டெய்லர் 15, நீஷம் 19, கிராண்ட்ஹோம் 16, மேட் ஹென்றி 4 என்ற சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்களில் 241/8 ரன்களை சேர்த்தது நியூஸிலாந்து.
இங்கிலாந்து தரப்பில் லியம் பிளங்கட் 3-42, கிறிஸ் வோக்ஸ் 3-37 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
242 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் ரன்களை சேர்க்க திணறியது. 
அதிரடி பேட்ஸ்மேன்களான ஜேஸன் ராய் 17, பேர்ஸ்டோ 36, ஜோ ரூட் 7, கேப்டன் மோர்கன் 9 ரன்களுடன் வெளியேறிய நிலையில், பென் ஸ்டோக்ஸ்-ஜோஸ் பட்லர் இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. 
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்: 6 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 59 ரன்களை எடுத்த பட்லர், பெர்குஸன் பந்தில் அவுட்டானார். பட்லர் தனது 20-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் அரைசதம் பதிவு செய்தார். கிறிஸ் வோக்ஸும் 2 ரன்களை மட்டுமே எடுத்து பெர்குஸன் பந்துவீச்சில் லத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
சமனில் முடிந்த ஆட்டம்:  பென் ஸ்டோக்ஸ் மட்டுமே 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 98 பந்துகளில் 84 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் இங்கிலாந்தும் 241 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவர் முறை: ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் இங்கிலாந்து அணி 6 பந்துகளில் 15 ரன்களை விளாசியது.
பின்னர் ஆடிய நியூஸிலாந்தும் 15 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. 
அதிக பவுண்டரிகளால் இங்கிலாந்து வெற்றி: இதனால் ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் நியூஸி. அணியைக் காட்டிலும் அதிகமாக விளாசிய அணி என்ற ஐசிசி விதிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
தொடர் நாயகனாக நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் சாதனைகள்
கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என அழைக்கப்படும் இங்கிலாந்து நான்கு முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றும் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. 44 ஆண்டுகள் வரை பட்டம் வெல்ல காத்திருக்க நேரிட்டது.தொடர்ச்சியான 6 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. 


அதே நேரத்தில் இலங்கை பட்டத்தை வென்றது, கென்யாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த 2015 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க சுற்றோடு இங்கிலாந்து வெளியேறியதின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அந்த அணி கட்டமைக்கப்பட்டு வந்தது டெஸ்ட் ஆட்டத்துக்கு முக்கியத்துவம் தராமல், ஒருநாள் ஆட்டத்துக்கான அணியை பலமாக உருவாக்கி வந்தனர். இதன் பலனாக 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதன் முறையாக பட்டம் வென்றுள்ளது.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்: ஜோ ரூட் 556, முந்தைய சாதனை கிரஹாம் கூச் 471 (1987), பேர்ஸ்டோ 532, பென் ஸ்டோக்ஸ் 465 ரன்கள் எடுத்தனர்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்: ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகள், முந்தைய சாதனை இயான் போத்தம் 16 (1992), மேலும் மார்க் உட் 18, கிறிஸ் வோக்ஸ் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிக கேட்ச்கள் : ஜோ ரூட் 13 கேட்ச்கள், முந்தைய சாதனை ரிக்கி பாண்டிங் 11 கேட்ச்கள் (2003).
அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை 76 சிக்ஸர்கள் (2019), முந்தைய சாதனை 22 சிக்ஸர்கள் (2007).
300 ரன்களுக்கு மேல் அடித்த சாதனை: புதிய சாதனை இங்கிலாந்து 6 முறை (2019), முந்தைய சாதனை ஆஸ்திரேலியா 5 (2007).
சுருக்கமான ஸ்கோர்:
நியூஸிலாந்து 241/8
நிக்கோல்ஸ் 55, லத்தம் 47
பந்துவீச்சு:
வோக்ஸ் 3-37,
பிளங்கட் 3-42.
இங்கிலாந்து 241 ஆல் அவுட்
பென் ஸ்டோக்ஸ் 84, பட்லர் 59,
பந்துவீச்சு:
பெர்குஸன் 3-50,
நீஷம் 3-43.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com