ஓய்வு முடிவை அறிவிக்க தோனிக்கு நிர்ப்பந்தம்?

விரைவில் நடைபெறவுள்ள மே.இ,தீவுகள் தொடருக்கான அணியில் சேர்க்க வாய்ப்பில்லாத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா தோனி என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓய்வு முடிவை அறிவிக்க தோனிக்கு நிர்ப்பந்தம்?


மே.இ.தீவுகள் தொடர் அணியில் சேர்க்க வாய்ப்பில்லை
விரைவில் நடைபெறவுள்ள மே.இ,தீவுகள் தொடருக்கான அணியில் சேர்க்க வாய்ப்பில்லாத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா தோனி என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2004-இல் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட்டின் அங்கத்தில் தவிர்க்க முடியாதவராக உள்ளவர். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட 3 பெரிய போட்டிகளில் பட்டம் வென்ற ஓரே கேப்டன் என்ற சாதனையை படைத்தவர் தோனி. 
பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த அவர் தற்போது மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரன் எடுப்பதில் தோனி தடுமாறி வருகிறார்.
விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படும் அவரால் முன்பு போல் ரன்களை குவிக்க முடியவில்லை. 
கடந்த 2014-ஆம் ஆண்டுடன் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டார். 90 டெஸ்ட்களில் மொத்தம் 4876 ரன்களை எடுத்துள்ளார், இதில் 6 சதங்கள், 1 இரட்டை சதம், 33 அரைசதங்களை அடித்துள்ளார்.
டி20 ஆட்டங்களில் கடந்த 2019 பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு பெற்றார். 98 ஆட்டங்களில் மொத்தம் 1617 ரன்களை எடுத்துள்ளார். 2 அரைசதங்கள் அடங்கும். 
ஒருநாள் ஆட்டங்களில் இதுவரை 350 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள தோனி மொத்தம் 10773 ரன்களை விளாசியுள்ளார். இதில் 10 சதம், 73 அரைசதங்கள் அடித்துள்ளார். 
உலகக் கோப்பையில் சொதப்பல்: தோனிக்கு அடுத்து தற்போது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் தயாராகி உள்ளார். 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். ஓரே நேரத்தில் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ரன்களை சேஸ் செய்வதில் தோனி மிகவும் தடுமாறியது தெளிவாக வெளிப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் தோனி சரியாக ஆடாத நிலையில், அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
அவர் ஓய்வு பெற்றால் அடுத்து அணியில் இடம் பெற ரிஷப் பந்த் தயாராக காத்துள்ளார்.
இந்நிலையில் தேர்வாளர்கள் குழுத் தலைவர் பிரசாத்தும் இதே கருத்தை எதிரொலித்துள்ளார். தோனியின் ஓய்வு விவகாரம் தொடர்பாக அவர் பேசுவார் எனத் தெரிகிறது.
மே.இ.தீவுகள் தொடர்: இதற்கிடையே மே.இ.தீவுகளுடன் 3 ஒருநாள், டி20 ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதற்கான அணி தேர்வு விரைவில் நடக்கிறது. இதில் கண்டிப்பாக தோனி இடம் பெற மாட்டார் என தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில வீரர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதற்கான பட்டியலில் இருந்து தோனி விலக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது. எனவே 2019 உலகக் கோப்பையோடு தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரிய வெற்றிடம்: எனினும் தோனி ஓய்வு பெற்றால் அவரால் ஏற்படும் பெரிய வெற்றிடத்தை நிரப்பக் கூடிய வீரர் தயாராகி வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com