உலகக் கோப்பை கடைசி ஓவரின்போது மரணமடைந்த நியூஸிலாந்து வீரரின் பயிற்சியாளர்!

சூப்பர் ஓவரில் ஜேம்ஸ் நீஷம் சிக்ஸ் அடித்த தருணத்தில் அவருடைய உயிர் பிரிந்துள்ளது...
உலகக் கோப்பை கடைசி ஓவரின்போது மரணமடைந்த நியூஸிலாந்து வீரரின் பயிற்சியாளர்!

2019 உலகக் கோப்பைப் போட்டி சமீபத்தில் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

நியூஸிலாந்து அணியின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸில் ஜிம்மி நீஷம் ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 13 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் சூப்பர் ஓவர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷமுக்கு இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சியளித்த டேவிட் ஜேம்ஸ் கார்டன் திடீரென மரணமடைந்துள்ளார். 

கடந்த 5 வாரங்களாக ஜேம்ஸ் கார்டன், இதய நோய் காரணமாக உடல் நலக் குறைவுடன் இருந்துள்ளார். வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம்  நடைபெற்ற நாளில் ஜேம்ஸ் கார்டன் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். எனினும் சூப்பர் ஓவரில் ஜேம்ஸ் நீஷம் சிக்ஸ் அடித்த தருணத்தில் அவருடைய உயிர் பிரிந்துள்ளது. 

தன்னுடைய கிரிக்கெட் பயிற்சியாளரின் மரணத்துக்கு ஜிம்மி நீஷம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com