தேர்வு குழுக் கூட்டம்: பிசிசிஐ செயலாளரால் இனி கூட்ட இயலாது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டத்தை இனிமேல் பிசிசிஐ செயலாளர் கூட்ட கூடாது. தேர்வுக் குழுத் தலைவரே கூட்டுவார் என சிஓஏ வியாழக்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டத்தை இனிமேல் பிசிசிஐ செயலாளர் கூட்ட கூடாது. தேர்வுக் குழுத் தலைவரே கூட்டுவார் என சிஓஏ வியாழக்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுநாள் வரை பிசிசிஐ செயலாளரே தேர்வுக் குழுக் கூட்டத்தை கூட்டுவது வழக்கம். தற்போது தேர்வு குழு தலைவருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், வீரர்கள் தேர்வில் செயலாளர் தலையீடு இல்லாத வகையிலும் நீதிபதி லோதா குழு பரிந்துரை அடிப்படையில் சிஓஏ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி இனிமேல் செயலாளர் எந்த தேர்வுக் குழு கூட்டத்தை கூட்டவோ அதில் பங்கேற்கவோ முடியாது. மேலும் வீரர்கள் மாற்றத்துக்காக அவரது ஒப்புதலும் இனி தேவையில்லை. இந்த உத்தரவின்மூலம் தேர்வு குழு விவகாரத்தில் செயலாளர் எந்த நிலைபாடும் எடுக்க முடியாது. முந்தைய சட்ட வரையறையின்படி, தேர்வுக் குழு செயலாளர் அதிகாரத்தின் கீழ் இயங்கி வந்தது.
நீதிபதி லோதா குழு தெளிவாக அளித்த பரிந்துரைகளின்படி வீரர்கள் தேர்வு மற்றும் கிரிக்கெட் விவகாரங்கள் கிரிக்கெட் தொடர்புடையவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் கூட்டத்தை கூட்டவோ, அல்லது அணிகளை அறிவிக்கவோ, நிர்வாக மேலாளருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 
புதிய சட்டவரையறை வகுக்கப்பட்ட பின்னரும் பிசிசிஐ செயலாளரே தேர்வு விவகாரத்தில் தலையீடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக சிஓஏ இந்த உத்தரவை பிறப்பித்தது.
தேர்வுக் குழுக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் அல்லது சிஇஓ பங்கேற்க கூடாது. முன்பு தேர்வு குழு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக செயலாளருக்கு இ-மெயில்களை அனுப்புவது வழக்கம். 
அதை ரத்து செய்து, இனிமேல், பயணத்துக்கோ அல்லது கூட்டம் கூட்டுவது தொடர்பாகவோ சிஇஓ-வுக்கு இ-மெயில் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறுவ தாக இருந்த தேர்வுக்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com