தோனி முடிவெடுக்க இதுவே சரியான தருணம்: கம்பீர்

எதிர்கால அணியைக் கருத்தில் கொண்டு பயனுள்ள முடிவை எடுக்க தோனிக்கு இதுவே சரியான தருணம் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் எம்.பி. கூறியுள்ளார்.
தோனி முடிவெடுக்க இதுவே சரியான தருணம்: கம்பீர்

எதிர்கால அணியைக் கருத்தில் கொண்டு பயனுள்ள முடிவை எடுக்க தோனிக்கு இதுவே சரியான தருணம் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் எம்.பி. கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மே,இ. தீவுகள் தொடருக்கான அணியில் தோனி இடம் பெற வாய்ப்பில்லை என தேர்வுக் குழு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதனால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என நிர்பந்தம் அதிகரித்துள்ளது. பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கூறியுள்ளனர். சேவாக் கூறுகையில் தோனியே இதில் முடிவெடுக்க வேண்டும். வேறு யாரும் அவரை வற்புறுத்த முடியாது எனக் கூறியிருந்தார்.

கெளதம் கம்பீர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: எதிர்காலம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். தோனி கேப்டனாக இருந்த போது, ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் நான், சச்சின், சேவாக் ஆகியோர் பெரிய மைதானங்களில் ஆட முடியாது எனக் கூறியிருந்தார். இளம் வீரர்களை அப்போது ஊக்குவித்தார். 

உணர்ச்சி வசப்படாமல் பயனுள்ள முடிவை தோனி எடுக்க வேண்டும். ரிஷப் பந்த் அல்லது சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களை தயார் செய்து வழிவிட வேண்டும். இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெறாவிட்டால், அவர்களால் சிறந்த ஆட்டத்தை தர முடியாது. புள்ளி விவரங்களைப் பார்த்தால் தோனி தான் சிறந்த கேப்டன். வெற்றி பெறும் போது முழு பாராட்டை அவருக்கு மட்டுமே தரக்கூடாது. அதே போல் தோல்வியின் போதும், பழியை அவர் மீதே போடக்கூடாது.

செளரவ் கங்குலி, கோலி ஆகியோரும் சிறந்த கேப்டன்கள் தான் என்றார் கம்பீர்.
உடனே ஓய்வு பெற வாய்ப்பில்லை: ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு முடிவை உடனடியாக அறிவிக்கும் எண்ணம் எதுவும் தோனிக்கு தற்போது இல்லை என அவரது நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com