முகப்பு விளையாட்டு செய்திகள்
உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கபடி அணிகளுக்கு பாராட்டு
By DIN | Published On : 30th July 2019 01:10 AM | Last Updated : 30th July 2019 01:10 AM | அ+அ அ- |

சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற இந்திய ஆடவர், மகளிர் கபடி அணியினர்.
மலேசியாவில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டியில் பட்டம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மலாக்கா நகரில் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் 32 ஆடவர் மற்றும் 18 மகளிர் அணிகள் கலந்து கொண்டன.
ஆடவர் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 57-27 என்ற புள்ளிக் கணக்கில் இராக்கை வென்று பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர் ஆறுமுகம் (நெல்லை) தலைமை தாங்கினார். மேலும் தனராஜ் (சிவகங்கை), அம்பேஸ்வரன் (சேலம்) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதே போல் மகளிர் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 47-29 என்ற புள்ளிக் கணக்கில் தைவானை வென்று பட்டத்தை கைப்பற்றியது.
தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் குருசுந்தரி (மதுரை) இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு மலேசிய துணை பிரதமர் வான் அசிசா வான் பரிசளித்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய அணிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நியூ கபடி பெடரேஷன் சார்பில் நடைபெற்ற விழாவில் நீதிபதி டிக்காராம், காவல்துறை ஐஜி ரவி ஆகியோர் பங்கேற்று பாராட்டிப் பேசினர்.
பெடரேஷன் செயலாளர் பிரசாத் பாபு, பயிற்சியாளர் ராஜரத்தினம், ராகேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.