முகப்பு விளையாட்டு செய்திகள்
சமீபகாலமாக அதிக ரன்கள் எடுக்காத ரஹானேவுக்கு ஆதரவு தருவோம்: விராட் கோலி உறுதி
By எழில் | Published On : 30th July 2019 02:45 PM | Last Updated : 30th July 2019 02:45 PM | அ+அ அ- |

2018 ரஹானேவுக்குச் சிறப்பாக அமையவில்லை. அதனால் 2019 உலகக் கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கவுன்டி கிரிக்கெட்டிலும் அவர் நினைத்தபடி விளையாடவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் முதல் இரு டெஸ்டுகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் முழு டெஸ்ட் தொடர்களிலும் அவர் விளையாடினார். எனினும் ரஹானே சதமடித்து 28 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டன. ஐந்து அரை சதங்கள் எடுத்து 24.85 சராசரி மட்டுமே இந்தக் கால இடைவெளியில் வைத்துள்ளார். இதனால் டெஸ்ட் அணியில் ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா இடம்பிடிப்பார் என்றொரு பேச்சும் நிலவுகிறது.
ஆனால், இச்சமயத்தில் நாங்கள் ரஹானேவுக்கு ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. அவர் கூறியதாவது:
எப்போதும் எங்களுக்கு ரஹானே சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆட்டச் சூழலை நன்குப் புரிந்துகொள்வார். விலைமதிப்பில்லா ஃபீல்டர். ஸ்லிப் கேட்சுகள் மூலமாக ஆட்டத்தில் எவ்வாறு பங்களிக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். அழுத்தமான சூழல்களில் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 43 வைத்துள்ளார். ரஹானே போன்ற ஒரு வீரருக்கு நாம் அச்சுற்றுத்தலான சூழலை உருவாக்கித் தரக்கூடாது.
ரன் அடிக்காத நிலைமை என்பது எல்லோருக்கும் வரும். அவர் இதை மாற்றிக்காட்டுவார். அதன்பிறகு அவர் ஆட்டத்தில் நிலைத்தன்மை இருக்கும். அவரும் புஜாராவும் எங்களுடைய உறுதியான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள். அவருடைய ஃபார்ம் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. அவருக்கு நாங்கள் நம்பிக்கை அளிப்போம். அவர் தன் நிலைமையை மாற்றிக்காட்டுவார். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.